பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி


பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 382 மனுக்களை பெற்றுக்கொண்டார்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு சென்று 31 மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் இந்த மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அவற்றின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவி

தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கால் துண்டிக்கப்பட்ட 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 2 ஆயிரத்து 800 மதிப்பில் அதிநவீன செயற்கை அவயங்களையும், சுய தொழில் செய்ய வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தில் 7 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலைகளையும் வழங்கினார். தொடர்ந்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் கூட்டுறவு துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் 2022-ம் ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த 2 விற்பனையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.4 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் மற்றும் 2 எடையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பணி பாராட்டுச் சான்றிதழ், கேடயங்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, உதவி ஆணையர் கலால் ராஜவேல், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லிஏஞ்சல், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story