மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¾ லட்சத்தில் நலத்திட்ட உதவி;அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¾ லட்சத்தில் நலத்திட்ட உதவியை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
நாகர்கோவில், ஜூன்.8-
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு...
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு என உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணம் மற்றும் நவீன காதொலி கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஆகியோர் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், கருவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:-
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி மூன்று சக்கர சைக்கிள், மூன்று சக்கர பெட்ரோல் வாகனம், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு வழங்கியும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
நலத்திட்ட உதவி
அதன் ஒரு பகுதியாக, குமரி மாவட்டத்தில் மனவளர்ச்சிக் குன்றியவர்கள், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புற உலக சிந்தனை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணங்கள் மாவட்டத்தில் உள்ள 10 சிறப்பு பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தலா ரூ.24,240 மதிப்பில் மொத்தம் ரூ.2.42 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதேபோல 13 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.39,754 மதிப்பிலான நவீன காதொலி கருவி என மொத்தம் ரூ.2.82 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரமநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டம்
இதனை தொடர்ந்து தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவன திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை கேபிள் அமைக்கும் பணிக்கான சர்வே முடிவடைந்து உள்ளது. 189 கி.மீ பூமிக்கு அடியிலும் 320 கி.மீ மின்கம்பம் வழியாகவும் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் பணி நடைபெற உள்ளது. ஒரு வருட காலத்தில் பணி முடிவடையும். இத்திட்டமானது வருகிற 9-ந் தேதியன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் குமரி மாவட்டம் முத்தலக்குறிச்சி ஊராட்சியிலும், திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சியிலும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார்.