ரூ.36½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்


ரூ.36½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்
x
தினத்தந்தி 17 July 2023 6:45 PM GMT (Updated: 17 July 2023 6:46 PM GMT)

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 26 பேருக்கு ரூ.36 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 26 பேருக்கு ரூ.36 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜீத் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 347 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக மாற்றுதிறனாளிகள் இருந்த இடத்திற்கே சென்று அவர்களிடம் கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது மாற்றுதிறனாளி சிறுவன் ஒருவருக்கு உடனடியாக சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பேருக்கு மாதாந்திர உதவி தொகை பெறுவதற்கான ஆணையினையும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலையினையும் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.32 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதற்கான மானிய தொகைக்கான ஆணையும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 97 ஆயிரமும் மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களும் என மொத்தம் 26 பேருக்கு ரூ.36 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


Next Story