ரூ.35.17 லட்சம் மதிப்பில் 102 பேருக்கு நலத்திட்ட உதவி
கீழக்கரை அருகே ரூ.35.17 லட்சம் மதிப்பில் 102 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கீழக்கரை
கீழக்கரை அருகே ரூ.35.17 லட்சம் மதிப்பில் 102 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அரசு நலத்திட்ட உதவி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா எக்ககுடி கிராமத்தில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 102 பயனாளிகளுக்கு ரூ.35.17 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் அமைக்கப்படும் கண்காட்சி, அரங்குகள், இணையதளம், சமூக வலைதளங்கள் மூலம் அரசின் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறலாம்.
மக்கள் முன் வைத்த பெரியகண்மாய் வரத்து கால்வாய் சீரமைத்தல், ஊராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், ரேஷன் கடை கட்டடம் வேண்டுதல், தொடக்கப்பள்ளி தரம் உயர்த்த வேண்டுதல் என உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சி பகுதிகளை தூய்மை, சுகாதாரம் பேண பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். பெற்றோர்கள் உயர்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சி
அரசின் பல்வேறு துறை திட்டங்கள், சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளை பொதுமக்களுடன் இணைந்து கலெக்டர் பார்வையிட்டார். இதில் எக்ககுடி ஜமாத் தலைவர் நூர் முகம்மது மற்றும் அஸ்கர் அலி கொத்தங்குளம் ஊர் தலைவர் குமார், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மாரிசெல்வி, கீழக்கரை தாசில்தார் பழனிகுமார், சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் ஜலாலுதீன், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் ராமமூர்த்தி, எக்ககுடி, இதம்பாடல் ஊராட்சி மன்ற தலைவர்கள் அக்பர் அலி, மங்கள சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.