19,654 பயனாளிகளுக்கு ரூ.26¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்


19,654 பயனாளிகளுக்கு ரூ.26¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 13 Feb 2023 6:45 PM GMT (Updated: 13 Feb 2023 6:46 PM GMT)

கோவை மாவட்டத்தில் 19,654 பயனாளிகளுக்கு ரூ.26¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

கோவை,

கோவை மாவட்டத்தில் 19,654 பயனாளிகளுக்கு ரூ.26¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் தெரிவித்தார்.

கலந்தாய்வு கூட்டம்

கோவை-திருச்சி சாலை ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 47,326 தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர். உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் 70,916 தொழிலாளர்களும் மற்றும் அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் 6,427 தொழிலாளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 669 தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர்.கோவை மாவட்டத்தில் கட்டுமான வாரியத்தில் 5,150 மாதாந்திர ஓய்வூதியதாரர்களும், உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் 7,927 ஓய்வூதியதாரர்களும், அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் 524 ஓய்வூதியதாரர்களும் என 13,601 ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

ரூ.26¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

கடந்த 2021-23-ம் ஆண்டு வரை கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 9,359 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 94 லட்சத்து 3 ஆயிரத்து 100-ம், உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் 9,062 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 27 லட்சத்து 10 ஆயிரத்து 950 மற்றும் அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் 1,233 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 81 ஆயிரம் என மொத்தம் 19,654 பயனாளிகளுக்கு ரூ.26 கோடியே 36 லட்சத்து 95 ஆயிரத்து 50 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கட்டுமான தொழிலாளர்களையும் பதிவு செய்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக முனைப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். அதற்கு விரைவில் பரிசீலிக்கப்படும் என்று அவர் கூறினார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) த.பாலதண்டாயுதம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story