மனுநீதி நாள் முகாமில் 293 பேருக்கு நலத்திட்ட உதவி
சோளிங்கர் அருகே மனுநீதி நாள் முகாமில் 293 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
சோளிங்கர் அடுத்த மருதாலம் கூட்டு சாலை அருகே சிறப்பு மனுநீதி நாள் முகாம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது. ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். வேலம் உள் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் இருந்து 313 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில் 293 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், ஊனமுற்றோர் உதவித்தொகை, ஆதரவற்ற பெண்கள் ஓய்வுதியம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், மானியத்துடன் கூடிய பவர் டில்லர் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முகாமில் குழந்தை திருமணம் செய்வதை பொதுமக்கள் தவிக்க வேண்டும், குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். பெண் குழந்தை சதவீதம் அதிகரிக்க வேண்டும், கருக்கலைப்பு செய்வதை தவிர்க்க வேண்டும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என கலெக்டர் பேசினார்.
மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் செல்வி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.