36,691 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
36,691 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதில் அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 23 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 9 ஆயிரத்து 621 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
முதல் முறையாக...
இதற்காக இன்று காலை 9.15 மணிக்கு அரியலூர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணிக்கு கொல்லாபுரத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் காலை 10.45 மணியளவில் புறப்பட்டு பெரம்பலூர் வழியாக கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடைகிறார். மதியம் 12.30 மணிக்கு செல்லும் விமானத்தின் மூலம் சென்னைக்கு மதியம் 1.30 மணிக்கு சென்றடைகிறார். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக அரியலூரில் அரசு விழாவில் பங்கேற்பதால் அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் சிறப்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.