41 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி


41 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
x

ஜோலார்பேட்டை அருகே நடந்த மனுநீதி நாள் முகாமில் 41 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

திருப்பத்தூர்

நலத்திட்ட உதவி

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமோட்டூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் வரவேற்றார். ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி, கலெக்டர் ஆகியோர் 41 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

பாதுகாப்புடன்...

தமிழகத்தில் அரசு சார்ந்த திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற முனைப்போடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி பகுதியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் இறந்த சம்பவம் மனதை உருக செய்தது.

இரவு நேரத்தில் பயணிக்கும் போது கவனமாக சாலையில் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும். 18 வயது நிறைவடையாத எவரும் வாகனத்தை இயக்கக் கூடாது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடத்தில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கர்ப்பிணி தாய்மார்கள் தனியார் மருத்துவமனைகள் மூலம் ஆண், பெண் சிசு குறித்து கண்டறிந்து கருக்கலைப்பு செய்யப்படுவதாக தகவல் கிடைத்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலங்களில் மின்சாதனங்களை இயக்கும்போது பாதுகாப்புடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மரக்கன்று வழங்கினார்

இதனைத் தொடர்ந்து அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளிடம் போர்டில் உள்ள பொருட்கள் குறித்தும், வாசிப்புத்திறன் குறித்தும் கேட்டறிந்து அவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி மரம் நடுவதால் ஏற்படும் பலன்கள் குறித்து குழந்தைகளுக்கு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ் ராஜா, வருவாய் கோட்டாட்சியர் பானு, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story