477 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 477 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 477 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர். மோட்டார் பொருந்திய தையல் எந்திரம், தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசி, மூன்று சக்கர சைக்கிள், பேட்டரியால் இயங்கக்கூடிய சிறப்பு சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி, காதொலிக் கருவிகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செயற்கை அவயங்கள், வங்கிக் கடன் மானியம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை கலெக்டர் ச.வளர்மதி தலைமை தாங்கினார். எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. முன்னிலை வகித்தார்.
வணங்க வேண்டும்
விழாவில் 477 மாற்றுத்திறாளிகளுக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 210 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதற்காகவே விஷ்வாஸ் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியை எங்கள் குடும்பத்தின் சார்பாக தொடங்கினோம்.
எங்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு நல்ல விஷேசம் நடந்தாலும் குடும்பத்தோடு நாங்கள் விஷ்வாஸ் பள்ளிக்கு தான் செல்வோம். அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு அளிப்போம். மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்கும் பணியாளர்கள் அனைவருமே சிறப்புக்குரியவர்கள் ஆவர்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்பவர்களின் சேவை மகத்தானது அவர்களின் கால்களை தொட்டு வணங்க வேண்டும்.
வேலை வாய்ப்பு
நமது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். அவ்வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமிலும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமிலும் குறிப்பிட்ட அளவிற்கு மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். வேலைவாய்ப்பு வேண்டி மனு அளிக்கும் மாற்றுத்திறனாளிகளின் மனுவை தனியாக பதிவு செய்து வைத்து, தனியார் துறைகளில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கலெக்டரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதிய உணவு
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் என சுமார் 1000 பேருக்கு அமைச்சர் காந்தி தன்னுடைய சொந்த செலவில் மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாற்று திறனாளி நல அலுவலர் சரவண குமார், உதவி கலெக்டர் வினோத் குமார், ராணிப்பேட்டை விஷ்வாஸ் பள்ளி மேலாண்மை இயக்குநர் வினோத் காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறைச்சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.