635 பேருக்கு ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் 635 பேருக்கு ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி குறித்த சாதனை மலர் வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் எம்.பி.துரை.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி குறித்த சாதனை மலரை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அனைத்து துறை சார்பில் 635 பேருக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 73 ஆயிரத்து 894 மதிப்பில் நலத்திட்ட உதவிகளைஅமைச்சர் எ.வ.வேலு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமுகநீதியுடைய ஆட்சி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற இந்த ஈராண்டில் மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்ட உதவிகள், புதியதிட்டப்பணிகள், பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்துப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி ஒரு சமுகநீதியுடைய ஆட்சி, எந்த ஒரு ஏற்றத்தாழ்வும், பாகுபாடும் இன்றி செயல்படும் ஆட்சி. அனைவரும் சமம் என்பது திராவிட மாடலாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 38 கிராமங்களில் நடைபெற்ற மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து 31,108 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 5,687 மனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அரசின் விதிமுறைகளுக்குட்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். செயல்படுத்த முடியாத மனுக்களுக்கு உரிய பதில் மற்றும் விளக்கம் மனுதாரருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
மறுமலர்ச்சி திட்ட கையேடு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையின் மூலமாக 2021-2022-ம் நிதியாண்டில் ரூ.157 கோடியே 56 லட்சம் மதிப்பில் 97 சாலைஅமைக்கும் பணி, 28 பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்த கையேட்டினை வெளியிட்டார். இதில் மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராணி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி
பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், வேளாண் இணை இயக்குனர் கருணாநிதி, ஒன்றியக்குழுதலைவர் அலமேலு ஆறுமுகம், நகரமன்ற தலைவர் சுப்ராயலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.