பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.11½ கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாகை செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு 1,168 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 765 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

வீடற்ற அனைவருக்கும் வீடு

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வீடற்ற அனைவருக்கும் வீடு வழங்குவது தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 82 ஆயிரம் குடிசை வீடுகள் உள்ளன. இவர்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டுவதற்கான வழிவகைகள் செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சுமார் 44 ஆயிரத்து 65 பேருக்கு வீட்டுமனை பட்டா தேவைப்படுகிறது. இதில் 2,488 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களுக்கு விரைவில் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

குடிசையில்லாத மாநிலம்

வருகிற 10 ஆண்டுகளில் குடிசையில்லாத மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார். விவசாயிகளின் நலன் கருதி தேவைகேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அந்தந்த மாவட்ட கலெக்டருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நெல்லின் ஈரப்பதம் 21 சதவீதம் வேண்டும் என விவசாயிகளும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவெடுக்க முடியாது. இந்திய உணவு கழகம் அனுமதி கொடுத்தால் தான் 21 சதவீதம் ஈரப்பதத்துடன் நெல்லை வாங்க முடியும்.

ஆனால் அதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அங்குள்ள அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்து ஈரப்பதம் 21 சதவீதம் உயர்த்தி கொடுத்த பிறகுதான், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த 17 மாதங்களில் இதுவரை தமிழக முழுவதும் 13 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகாரிகள்

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா சித்ரா, உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனாமணி, நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story