பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
x

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அரியலூர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்திற்கு அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, சிறப்பு திட்ட செயலாக்க அரசு செயலாளர் தரேஸ் அஹமது, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், பணி முன்னேற்றம் உள்பட பல்வேறு தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில், ஒவ்வொரு துறை சார்ந்தும் தெரிவித்தபடி முடிக்க வேண்டிய பணிகளின் கால அளவிற்குள் பணிகளை முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல் துறை சார்ந்த கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில் அலுவலர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஏழை, எளிய மக்களின் மனுக்களை நிராகரிக்காத வகையில், அவற்றுக்கு தீர்வு காண வேண்டும், என்றார்.

1,735 பயனாளிகளுக்கு...

முன்னதாக அவர், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 1,735 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 56 லட்சத்து 50 ஆயிரத்து 400 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story