பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்


பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
x

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் சிவசங்கர், சிறப்பு திட்ட செயலாக்க துறை அரசு செயலாளர் தரேஸ் அஹமது, மாவட்ட கலெக்டர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பல்வேறு அரசு திட்டங்ங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில், முதல்-அமைச்சர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து கிராமப்புற மாணவ-மாணவிகளிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் அரசுப்பள்ளிகளில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு செய்யப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் அனைத்தும் முதல்-அமைச்சரின் உரிய அனுமதி பெற்று செயல்படுத்தப்படும், என்றார்.

987 பயனாளிகளுக்கு...

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு அரசு துறைகளின் மூலம் 987 பயனாளிகளுக்கு ரூ.20 கோடியே 85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார். ஆய்வு கூட்டத்தில் பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு அஞ்சலகத்தில் வங்கி கணக்கு தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று சிறப்பு திட்ட செயலாக்க அரசு செயலாளர் தரேஸ் அஹமது தெரிவித்தார்.


Next Story