மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 13 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 9:36 AM GMT)

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

தென்காசி

தென்காசி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா உதவி ஆணையர் ராஜ மனோகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட 425 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகள் தலா ரூ.13,500 மதிப்பிலும், 3 மாற்று திறனாளிகளுக்கு மடக்கு குச்சி, கருப்பு கண்ணாடி, கைக்கடிகாரங்கள் தலா ரூ.1,000 மதிப்பிலும,் மொத்தம் ரூ.84 ஆயிரம் மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வழங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் காதொலி கருவி வேண்டி மனு அளித்த தென்காசியை சேர்ந்த ஆறுமுகம் என்ற காது கேட்க இயலாத மாற்று திறனாளிக்கு ரூ.8,500 மதிப்பிலான காதொலி கருவியை கோரிக்கை மனுவை ஏற்ற உடன் கலெக்டர் வழங்கினார்.


Next Story