பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி


பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் வழங்குகிறார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கைகாட்டி அருகில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நட்டு வைத்தும், முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார்.

இதற்காக அங்கு விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னேற்பாடு பணி

அப்போது அங்கு நடைபெற்று வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், தற்காலிக குடிநீர், கழிவறை வசதி அமைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து சிறப்பாக செய்ய வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம்.கார்த்திகேயன், உதயசூரியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கோட்டாட்சியர் பவித்ரா, தாசில்தார் சத்தியநாராயணன், தி.மு.க.ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என்.டி.முருகன், ஒன்றிய செயலாளர்கள் அன்புமணிமாறன், கனகராஜ், சத்தியமூர்த்தி, நெடுஞ்செழியன், மாவட்ட நிர்வாகி மடம் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story