மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி
பாளையங்கோட்டையில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
நெல்லை கோட்ட எல்.ஐ.சி. எஸ்.சி, எஸ்.டி, பவுத்த ஊழியர்கள், அதிகாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்- 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் மாணவ-மாணவிகள் மற்றும் அட்டவணை இன மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா, ஆசிரியர்கள் மற்றும் சமூகப்பணியாற்றும் சமூக அலுவலர்களுக்கு பாராட்டு விழா, பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை பாளையங்கோட்டையில் நடந்தது.
கோட்டத்தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சுவாமிநாதன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப் (பாளையங்கோட்டை), ராஜா (சங்கரன்கோவில்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்கள்.
விழாவில் பெற்றோரை இழந்த கடம்பன்குளம் மாணவி இசக்கியம்மாளுக்கு ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. வேப்பங்குளம் மாணவி முத்து பிரியாவுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
விழாவில் நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, எல்.ஐ.சி. முன்னாள் செயல் இயக்குனர் வி.ஜே.சிங், எல்.ஐ.சி. முதுநிலைக் கோட்ட மேலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.