281 பயனாளிகளுக்கு ரூ.23¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


281 பயனாளிகளுக்கு ரூ.23¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x

வால்பாறையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 281 பயனாளிகளுக்கு ரூ.23¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி சப்-கலெக்டர் வழங்கினார்.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 281 பயனாளிகளுக்கு ரூ.23¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பொள்ளாச்சி சப்-கலெக்டர் வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாம்

வால்பாறையில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கினார். முகாமில் அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்து பேசியதாவது:- வால்பாறையில் மக்கள் தொடர்பு முகாமை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

புகையிலை பொருட்கள் விற்பனையை கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதுமான அரசு பஸ்கள் இயக்க வேண்டும். படகு இல்லம், தாவரவியல் பூங்கா திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறை பி.ஏ.பி. காலனி பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் பேசும்போது, வால்பாறையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நகராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு தெரிவிக்க வேண்டும். சுற்றுலா சார்ந்த மேம்பாட்டு பணிகள் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு நவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில், 281 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 28 ஆயிரத்து 990 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சப்-கலெக்டர் வழங்கினார். முகாமில் தாசில்தார் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் பாலு, தனி தாசில்தார் ஜெகதீசன், நகராட்சி துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி, தோட்டக்கலைத்துறை சார்பில் விதைகள் கண்காட்சி நடந்தது. முன்னதாக நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


Next Story