நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்
திருவெண்காடு:
செம்பனார்கோவில் ஒன்றியம், கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியில் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, கீழப்பெரும்பள்ளம் ஊராட்சியை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழா என முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செம்பை ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம். அப்துல்மாலிக், தஞ்சை மண்டல தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர், தலைமை செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் வரவேற்றார். இதில் 80 வயதை கடந்த தி.மு.க. மூத்த முன்னோடிகள் 25 பேருக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பொற்கிழி வழங்கி பேசினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவர் நெடுஞ்செழியன், துணைச் செயலாளர் உத்திரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.