தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு உறைகிணறுகள் மூழ்கியதால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிப்பு
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் உறைகிணறுகள் நீரில் மூழ்கியது. இதனால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து பாதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் உறைகிணறுகள் நீரில் மூழ்கியது. இதனால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து பாதிக்கப்பட்டுள்ளது.
17 குடிநீர் திட்டங்கள்
கிருஷ்ணகிரி அணையின் கீழ் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இருமத்தூர் வரை 17 இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளையுடன் கூடிய உறைகிணறுகள் அமைக்கப்பட்டு 17 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் தளிஅள்ளி தலைமை நீரேற்று நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து சந்தூர், கண்ணன்டஅள்ளி, மாரண்டஅள்ளி மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஒபிளிகாட்டூர், காக்கங்கரை வரை உள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
உறைகிணறுகள் மூழ்கின
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உறைகிணறுகளை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.
இதனால் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக மேலாக போதிய குடிநீரின்றி கிராம மக்கள் அவதியுற்று வருகின்றனர். விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
கழிவுகள் அடைப்பு
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கனமழை பெய்தாலும், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. ஆற்றில் தண்ணீர் வினியோகம் தடைப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆற்றில் தண்ணீர் குறையும் வரை, எங்களுக்கு அந்தந்த ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக நீரேற்றும் ஊழியர்களிடம் கேட்டபோது, தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் செல்வதால் உறைகிணறுகளில் இருந்து நீரேற்றம் செய்ய முடியவில்லை. ஆற்றில் அடித்து வரப்பட்ட கழிவுகள் உள்ளிட்டவை அடைத்துள்ளது. ஆற்றில் தண்ணீர் குறைந்தவுடன் குடிநீர் வினியோகம் சீர் செய்யப்படும் என்றனர்.