மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை பரிதாப சாவு
நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் தொழிலாளி பலியானார்.
நெல்லையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு விபத்தில் தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
நெல்லை டவுன் கருப்பந்துறை ஜெயம்நகரை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மகன் இசக்கி நம்பிராஜன் (வயது 29), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து சீவலப்பேரி ரோட்டில் மணிக்கூண்டு அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் செங்கல் லோடு ஏற்றிய லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக இசக்கி நம்பிராஜனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பரிதாப சாவு
தகவல் அறிந்த மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அங்கு வந்து, அவரை மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இசக்கி நம்பிராஜன் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த இசக்கி நம்பிராஜனுக்கு 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் புதுமாப்பிள்ளை இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு விபத்து
நெல்லை அருகே உள்ள தருவை இந்திரா காலனி அம்பை ரோட்டை சேர்ந்தவர் தங்கபெருமாள் மகன் சக்திவேல் (22), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தருவை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனது நண்பரான ஆறுமுகம் மகன் கதிரேசன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
மோட்டார் சைக்கிளை சக்திவேல் ஓட்டினார். அம்பை ரோட்டில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் அங்குள்ள பயணிகள் நிழற்கூடத்தில் மோதியது. இதில் சக்திவேல், கதிரேசன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர்.
முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் 2 பேரையும் மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். கதிரேசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.