ரேஷன் கடைகளில் கூடுதலாக என்னென்ன பொருட்கள் தேவை?
ரேஷன் கடைகளில் கூடுதலாக என்னென்ன பொருட்கள் தேவை? என்று பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் கிடைப்பதால், சாதாரண மக்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினரும் அங்கு உணவுப்பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வருகை குறைவாக காணப்படுகிறது. காலையில் 8.30 மணியில் இருந்து பகல் 12.30 மணி வரையிலும், மாலையில் 3 மணியிலிருந்து இரவு 7 மணி வரையிலும் கடை திறந்திருக்கிறது.
இருந்தாலும் பொதுமக்கள் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலையில் 9 மணிக்கு உள்ளாகவும், மாலை 4 மணிக்கு மேலும்தான் ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர். இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான ரேஷன் கடைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. மாலையில் பரபரப்பாக மாறி விடுகின்றன.
ரேஷன் கடைகளில் வழக்கமாக வழங்கிவரும் பொருட்களுடன் கூடுதலாகவும் சில உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள். தற்போது வழங்கப்படும் பொருட்கள் தரமாகவும், எடை சரியாகவும் இருக்கிறதா? கூடுதலாக என்ன பொருட்கள் தேவைப்படுகிறது? போன்றவை குறித்து இங்கே பலர் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரங்களை காண்போம்.
மினி சூப்பர் மார்க்கெட்டாக மாறுமா?
விழுப்புரம் அருகே பில்லூரை சேர்ந்த வள்ளி:-
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் வழங்குகிறார்கள். ஆனால் இன்னும் கூடுதலாக தரத்தை உயர்த்தி வழங்கினால் உடல் ஆரோக்கியமும் நலமாக அமையும். அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில், துணி சோப்பு, டீ தூள், மண்எண்ணெய் ஆகியவை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.
இருந்தபோதிலும் முன்பு வழங்கிய கோதுமை, உளுந்து ஆகியவற்றை வழங்காமல் நிறுத்தியுள்ளது ஏழை, எளிய மக்களை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது. வெளிமார்க்கெட்டில் இவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் சில குடும்பங்களில் அவற்றை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
எனவே நிறுத்தப்பட்டுள்ள கோதுமை, உளுந்து ஆகியவற்றை மீண்டும் வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் இந்த பொருட்களுடன் கூடுதலாக பாசிப்பருப்பு, கடலை பருப்பு, பச்சை பட்டாணி, நாட்டு சர்க்கரை போன்ற பொருட்களை சேர்த்து வழங்கினால் மக்களிடையே கூடுதல் வரவேற்பாக இருக்கும்.
மக்கள் விற்பனை நிலையத்தில் பொருட்கள் கிடைக்காமல் திரும்ப செல்லாத அளவிற்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைத்தால் மேலும் சிறப்பாக இருக்கும். மேலும் ரேஷன் கடைகளை அனைத்து வகை மளிகை பொருட்களையும் விற்பனை செய்யும் மினி சூப்பர் மார்க்கெட் போன்று மாற்றினால் பொதுமக்களுக்கும் பயனளிக்கும். இதன் மூலம் அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
மாற்றம் வேண்டும்
வளத்தியை சேர்ந்த புஷ்பா:-
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் ஒரு சில மாதங்களில் தரம் நன்றாக உள்ளன. சில மாதங்களில் தரம் சரியில்லாமல் உள்ளது. குறிப்பாக அரிசியின் தரம் சில சமயங்களில் புழுத்துப்போய் மாவு வரும் அளவுக்கு உள்ளது.
இதற்கு ரேஷன் கடைக்காரரை சொல்லி குற்றமில்லை. காரணம், மூட்டையின் உள்ளே இருப்பதை அவர்கள் எப்படி பார்க்க முடியும்? எனவே ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் முன் அவைகளின் தரத்தை அதிகாரிகள் சோதனையிட்டு அனுப்பினால் மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
அதேபோல் முன்பெல்லாம் சாதாரணமான எடை தராசில் பொருட்களை எடை போட்டு கொடுத்தார்கள். அப்போது வேண்டுமானல் எடை குறைந்திருக்கலாம். ஆனால் தற்போது மின்னணு தராசில் எடை போட்டு கொடுப்பதால் பொருட்கள் எடை குறைவதற்கு வாய்ப்பில்லை.
பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ரேஷனில் விற்பனை செய்யலாம். ஆனால் அதற்கென தனியாக விற்பனையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப அதை வாங்க வேண்டுமே தவிர இந்த பொருளை கட்டாயம் வாங்க வேண்டும் என்று யாரையும் வற்புறுத்தக்கூடாது.
வெளியிடங்களில் உள்ளதுபோல் எல்லா பொருட்களும் தரமானதாக உள்ளது என்று மக்கள் நினைத்து வாங்கும் அளவிற்கு ரேஷன் கடைகளில் மாற்றத்தை அரசு கொண்டு வர வேண்டும்.
கட்டாயப்படுத்தக் கூடாது
திண்டிவனம் ரோஷணையை சேர்ந்த கதிரேசன்:-
ரேஷன் கடைகளில் தற்போது எடை குறையாமலும், தரமாகவும் பொருட்கள் வழங்கப்படுகிறது. பொருட்கள் வழங்குவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் பொதுமக்கள், உடனடியாக புகார் தெரிவிக்க விழிப்புணர்வுடன் செயல்படுவதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் தரமாகவும், எடை சரியாகவும் வழங்கப்படுகிறது.
குடும்பத்துக்கு தேவையான பொருட்களை ரேஷன் கடை மூலமாக தரமாக வழங்கினால் மக்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்ட மாட்டார்கள். ஆனால் பொதுமக்கள் விரும்பாத சோப்பு போன்றவற்றை விற்பனை செய்தால் வாங்க மறுப்பது எப்போதும் நடக்கின்ற விஷயம்தான், அவற்றை வாங்குவதற்கு பொதுமக்களை கட்டாயப்படுத்தவும் கூடாது.
ரேஷன் கடைகளில் தற்போது கோதுமை, உளுந்து வழங்கப்படவில்லை. இன்றைக்கு சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலையை நோக்கி செல்வதால் அரிசி உணவுக்கு பதிலாக கோதுமை உணவுகளை சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆகவே கோதுமையையும், அதனுடன் சேர்த்து உளுந்தையும் வழங்கினால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும்.
மானிய விலையில் பயிர் வகைகள்
செஞ்சி அருகே ஆலம்பூண்டியை சேர்ந்த தினேஷ்:-
தமிழக அரசு, உணவுப்பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி சில சமயங்களில் தரமற்றதாக இருக்கிறது. அதேபோன்று சர்க்கரையும் பெயரளவுக்கு மட்டுமே தரம் உள்ளதாக இருக்கிறது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை வழங்கலாம். ஏனெனில் பலரும் அதை விரும்பி பயன்படுத்துகிறார்கள். மேலும் மண்எண்ணெயும் போதுமான அளவில் கிடைப்பதில்லை. அதுவும் கிராமப்புறங்களில் அரை லிட்டர், ஒரு லிட்டர் என வினியோகம் செய்யப்படுகிறது. அதை முற்றிலுமாக தவிர்த்து அரசு சார்பில், ரேஷன் கடைகளிலேயே 5 லிட்டர் சிலிண்டர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். இன்றைக்கு புதிது, புதிதாக ஏற்பட்டு வரும் நோய் தொற்றின் காரணமாக பலரும் இயற்கை உணவுக்கு மாறி வருகின்றனர். ஆகவே ரேஷன் கடைகளில் பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள், உளுந்து, கொள்ளு ஆகியவற்றையும் மானிய விலையில் வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முதியவர்கள் அலைக்கழிப்பு
கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரமேஷ்:-
'ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் இல்லை என்று கூறுவதில்லை. கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களை வழங்குகிறார்கள். உளுந்து மற்றும் கோதுமை மாவு வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே வழங்கியபடி இந்த இரண்டு பொருட்களையும் வழங்க வேண்டும். இதுதவிர எண்ணெய் வகைகள் மற்றும் மளிகைப் பொருட்களையும் மானிய விலையில் வழங்கலாம். இதன் மூலம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பலர் பயனடைவார்கள். விரல் ரேகை பதியவில்லை என்று காரணம் கூறி சில நேரங்களில் முதியவர்களை அலையவிடுகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் மாற்று ஏற்பாடுகள் மூலம் உணவு பொருட்களை வழங்க அறிவுறுத்த வேண்டும். துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது ஒரு குடும்ப அட்டைக்கு ½ லிட்டருக்கு குறைவாக மண்எண்ணெய் வழங்குகிறார்கள். அதனை ஒரு குடும்ப அட்டைக்கு குறைந்தபட்சம் ஒரு லிட்டர் மண்எண்ணெய் வழங்க வேண்டும்.
மளிகை பொருட்கள் அனைத்தும் வழங்க...
தியாகதுருகத்தை சேர்ந்த குடும்ப தலைவர் வேலுமணி கூறுகையில்,
ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. சிலசமயங்களில் கோதுமை இல்லை என கூறுகின்றனர். மேலும் சோப்பு, பெருங்காயம் உள்ளிட்ட பொருட்களை கூடுதலாக வாங்க நிர்பந்தம் செய்கிறார்கள். தற்போது பல்வேறு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்புகளில் மண் மற்றும் தூசுகள் கலந்து தரமற்ற பருப்புகள் வினியோகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து விற்பனையாளர்களிடம் கேட்கும் போது அரசு மூலம் எங்களுக்கு வழங்கப்படும் பொருட்களைத்தான் விற்பனை செய்கிறோம் நாங்கள் என்ன செய்ய முடியும் என கூறுகின்றனர்.
எனவே தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு தரமான பருப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வரும் காலங்களில் மளிகை பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் ரேஷன் கடையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.
தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள்
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது,ரேஷன் கடைகளுக்கு சில நேரங்களில் தரமில்லாத அரிசி வருவது வழக்கம்தான். நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி தரமாக இருப்பதை, தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அரிசி தரமில்லை என்றால் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும். மாறாக ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசி மூட்டைகளில் குறைந்தது 5 கிலோ எடை குறைவாகவேத்தான் வருகிறது. இதேபோல்தான் மற்ற பொருட்களிலும் எடை குறைவு உள்ளது. எனவே அனைத்து நுகர்பொருள் வாணிப கிடங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி கண்காணிக்க வேண்டும்' என்றனர்.
கண்காணிப்பு குழு
உணவுத் துறை அதிகாரிகள் கூறும் போது, தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலரும், உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர், கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஆகிய 4 அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குதல் மற்றும் குடோன்களில் இருந்து பெறுதல், சரியான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுதல், சரியான நேரத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்டவைகளை இக்குழு கண்காணிக்கிறது. இதேபோல், திடீர் ஆய்வு பணிகளையும் இந்த குழு மேற்கொள்கிறது. அத்துடன் மாதம் தோறும் முதல் மற்றும் 3-வது திங்கட்கிழமைகளில் இந்த குழு கூடி, ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும், சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து விவர அறிக்கையை உணவு வழங்கல் கமிஷனருக்கு மாதந்தோறும் அனுப்பி வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் இல்லை. தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் கடைகளிலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது' என்றனர்.