தமிழரை பிரதமராக ஆக்கினால் மகிழ்ச்சி:மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என்று புரியவில்லை?முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி


தமிழரை பிரதமராக ஆக்கினால் மகிழ்ச்சி:மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என்று புரியவில்லை?முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2023 7:45 PM GMT (Updated: 13 Jun 2023 7:28 AM GMT)

தமிழரை பிரதமராக ஆக்கினால் மகிழ்ச்சி என்றும், இந்த கருத்தில் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என்று புரியவில்லை? என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சேலம்

சேலம்,

முதல்-அமைச்சர் பேட்டி

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களுக்கு தி.மு.க. பெயர் வைக்கிறது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே?

முதல்-அமைச்சர் பதில்:- தொடர்ந்து நாங்கள் இதற்கு விளக்கம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். இருந்தாலும் இப்போதும் கேட்கிறீர்கள். இதுமாதிரி நடந்து கொள்வது அ.தி.மு.க.வின் கலை. அவர்கள் பாணி தான் இது. சென்னையில் தி.மு.க. ஆட்சியில் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது கோயம்பேடு பஸ் நிலையத்தை ஆசியாவிலேயே ஒரு மிகப்பெரிய பஸ் நிலையமாக கட்டினோம். ஆனால் கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர். பெயரை வைத்துக்கொண்டு அதை ஜெயலலிதா திறந்து வைத்தார். நாங்கள் அதற்கு கவலைப்படவில்லை.

அ.தி.மு.க என்ன செய்தது?

அதே மாதிரி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமை செயலகத்தை தி.மு.க. ஆட்சியில் தான் புதிதாக கட்டினோம். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. என்ன செய்தது?. அதை அரசு மருத்துவமனையாக மாற்றி அரசியல் செய்தார்கள். சென்னையில் இன்றைக்கு ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மெட்ரோ ெரயில் திட்டத்தை நாங்கள் தான் தொடங்கி வைத்தோம்.

கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது, நான் துணை முதல்-அமைச்சராக இருந்தேன். நானே ஜப்பான் நாட்டிற்கு சென்று அங்கே நிதி உதவியை பெற்று அதன் மூலமாகத்தான் மத்திய அரசினுடைய உதவியுடன் அதை நாம் தொடங்கி வைத்தோம். அன்றைக்கு அதை எதிர்த்தவர்கள் யார்? என்று கேட்டீர்களானால், மறைந்த ஜெயலலிதா, முதல்-அமைச்சராக இருந்தபோது அதை அவர்கள் எதிர்த்தார்கள். மெட்ரோ தேவையில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். பின்னர் அதன் திறப்புவிழாவின் போது தன்னுடைய பெயரை பொறித்துக்கொண்டு கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

அதே மாதிரி கோட்டூர்புரத்தில் இருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தி.மு.க. ஆட்சியில் தான் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் கட்டி திறந்து வைத்தார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு அதை பாழ்படுத்தவேண்டும் என்று அதை எப்படியெல்லாம் சீரழித்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

அதற்கு பிறகு நீதிமன்றத்திற்கு சென்று வாதாடி, போராடி அதை நிலைநாட்டி இருக்கிறோம். இப்படியே சொல்லிக்கொண்டு சென்றால், அந்த பட்டியல் இன்னும் போகும். இந்த வரலாறுகள் எல்லாம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு தெரியாது என்று நினைக்கிறேன். இதையெல்லாம் நினைத்து பார்க்க வேண்டும்.

அம்மா உணவகம்

அதேபோல, அம்மா உணவகம். ஆட்சிக்கு வந்தவுடன் அதை மூடிவிடுவார்கள், மூடிவிடுவார்கள் என்று திட்டமிட்டு ஒரு பொய் பிரசாரமே செய்தார்கள். அதை இதுவரைக்கும் மூடவில்லை. அது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இன்னொன்று சொல்ல வேண்டுமென்றால், பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பிள்ளைகளின் புத்தகப்பையில் அவர்கள் ஆட்சியில் ஜெயலலிதா படமும், முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி படமும் போட்டு அன்றைக்கு மாணவர்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். அதில் நாம் ஆட்சிக்கு வந்த நேரத்தில் சிறிது மீதம் வந்திருந்தது. அந்த நேரத்தில் அரசு அதிகாரிகள் என்னிடத்தில் வந்து கேட்டார்கள். இதை மாற்றி விடலாம். ஏனென்றால், ஏற்கனவே இருந்த முதல்-அமைச்சர் படம் இருக்கிறது. எனவே உங்கள் படத்தை போடுகிறோம் என்று சொன்னார்கள்.

யார் படமும் போடவேண்டாம், இருப்பது அப்படியே இருக்கட்டும். இதை மாற்றினீர்கள் என்றால், பல கோடி ரூபாய் இழப்பு வரும். அந்த இழப்பை அரசு ஏற்றுக்கொள்ளாது. எனவே அப்படியே இருக்கட்டும் என்று சொன்னவன் தான் நான். எனவே இதையெல்லாம், இந்த கேள்வியை கேட்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நான் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

மோடி மீது என்ன கோபம்?

கேள்வி:- அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தபோது, இரண்டு முறை தமிழர் ஒருவர் பிரதமர் ஆவதை தி.மு.க. தான் தடுத்தது என்று கூறியிருக்கிறாரே?

பதில்:- அதை வெளிப்படையாக அவர் சொன்னால் அதற்கு உரிய விளக்கத்தை நம்மால் சொல்லமுடியும். அதனால் அதற்கு விளக்கமாக இப்போது பதில் சொல்ல முடியாது. இருந்தாலும், தமிழரை பிரதமராக ஆக்கப்போகிறேன் என்று அமித்ஷா சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. 2024-ம் ஆண்டில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வரவேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தராஜன் மற்றும் முருகன் ஆகியோர் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி:- கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மும்முரமாக இருக்கிறார்கள்? அதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?.

பதில்:- அதை எதிர்ப்பதில் நாங்களும் மும்முரமாக இருக்கிறோம்.

கேள்வி:- கடந்த 50 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள சரபங்கா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து...

பதில்:- அது ஆய்வில் இருக்கிறது. கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது

கேள்வி:- தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பா.ஜ.க. அரசு கொடுத்திருப்பதாக அமித்ஷா ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார்? அதுபற்றி...

பதில்:- நான் சேலத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தெளிவாக பேசியிருக்கிறேன். அதாவது, பா.ஜ.க. ஆட்சி இருந்தபோது, எந்த சிறப்பு திட்டமும் இந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த தி.மு.க. அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்னென்ன சிறப்பு திட்டங்கள் வந்தது என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அவர் அதைப்படிக்கவில்லையா? இல்லை அதை படித்து அதை யாரும் எடுத்து சொல்லவில்லையா? என்பதுதான் எனக்கு சந்தேகம். பா.ஜ.க.வினுடைய 9 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேள்வி கேட்டேன். அந்த கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், அன்றைக்கு தமிழ்நாட்டிற்கு கிடைத்ததை சொல்ல வேண்டுமென்றால், சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ெரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ெரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக்குடிநீர் திட்டம், சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய 3 இடங்களில் சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஜவுளிப்பூங்கா. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை

இதேபோல தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்பு திட்டங்களை பா.ஜனதா அரசு கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் என் கேள்வி. எனவே எந்த திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டிருப்பதை பற்றி நான் கேட்கவில்லை. இன்றைக்கு ஜி.எஸ்.டி.யில் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசிற்கு நிதி கொடுத்து கொண்டிருக்கிறது. அந்த ஜி.எஸ்.டி.யில் தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கொடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்கு தான் இன்றைக்கு மத்திய அரசு மிகவும் குறைவாக அந்த நிதியை கொடுத்து கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அதிகமாக கொடுத்து கொண்டிருக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்து கேட்டேன்.

அதேபோல, மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு மத்திய நிதி மந்திரியாக இருந்த மறைந்த அருண் ஜெட்லி, நாடாளுமன்றத்தில் அதற்கு உறுதி கொடுத்து அறிவித்தார். அது என்ன ஆகியது? பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அதற்கு பின் பலமுறை அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். அவர் வந்தபோது, பணி 50 சதவீதம் முடிந்துவிட்டது, 75 சதவீதம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டு சென்றாரே தவிர இதுவரைக்கும் எந்த பணியும் நடைபெறவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. அதையெல்லாம் மூடி மறைத்து அவர் பேசிவிட்டு சென்றிருக்கிறாரே தவிர, நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை.

இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது

கேள்வி:- டாஸ்மாக்கில் ரூ.10 ஊழல் புகார் குறித்து...

பதில்:- அதெல்லாம் திட்டமிட்டு செய்யக்கூடிய பிரசாரங்கள்.

கேள்வி:- எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வராததற்கு தி.மு.க. தான் பதில் சொல்ல வேண்டும் என்று அமித்ஷா சொல்லியிருக்கிறாரே?

பதில்:- தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, எய்ம்ஸ் என்று ஒரு மருத்துவமனை தேவையே படவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவ கட்டமைப்புகள் அதிக அளவில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இருந்தாலும், இதை அறிவித்தது யார்? தி.மு.க.வா அறிவித்தது, அறிவித்தது மத்திய அரசு. அவர்கள் தான் இதை செய்ய வேண்டும். இந்த கேள்வியை அவர் கேட்பதே ஒரு பொறுப்புள்ள உள்துறை மந்திரிக்கு அழகல்ல.

கேள்வி:- தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஊழல் பெரிய அளவில் நடந்தது என்று சொல்கிறார்கள்?

பதில்:- ரபேல் ஊழல், அதானி ஊழல். இதனால் இன்றைக்கு இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது. முதலில் அதற்கு பதில் சொல்லட்டும், அதற்கு பின்பு இதைப்பேசுவோம்.

கேள்வி:- அத்திக்கடவு-அவினாசி திட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது.

முதல்-அமைச்சர் பதில்:- முடியக்கூடிய நிலையில் இருக்கிறது, விரைவில் திறக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


Next Story