கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் எவை?


கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் எவை?
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பக்க எடுத்து வர வேண்டிய ஆவணங்கள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பக்க எடுத்து வர வேண்டிய ஆவணங்கள் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மகளிர் உரிமைத்தொகை

குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24-ந் தேதி முதல் 4-8-2023 வரை நடைபெறும். 2-ம் கட்ட முகாம் 5-8-2023 முதல் 16-8-2023 வரை நடைபெற உள்ளது.

ரேஷன் கடைப் பணியாளர் ஒவ்வொரு ரேஷன் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவைகளை வீடு வீடாக சென்று வழங்குவார்.

டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பாகத் தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக ரேஷன் கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.

தகவல் பலகை

விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்பபதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

விண்ணப்பப்பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒரு முறை கடவுச்சொல் (ஒ.டி.பி.) பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி எண் இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும்.

உரிய ஆவணங்கள்

குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்பபதிவு முகாமிற்கு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களைச் சரிபார்ப்புக்கு எடுத்து வர வேண்டும். இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04652 - 231077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story