கருகிய நெற்பயிர்களை காக்கும் வழிமுறைகள் என்ன?-வேளாண் அதிகாரி விளக்கம்


கருகிய நெற்பயிர்களை காக்கும் வழிமுறைகள் என்ன?-வேளாண் அதிகாரி விளக்கம்
x

ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் பாசி படர்ந்தும், கருகிய நெற்பயிர்களை காப்பது எப்படி? என்பது குறித்து வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரியலூர்

நெற்பயிர்கள் கருகின

அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஒன்றியத்தில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக தற்சமயம் நடவு செய்து 30 நாட்களான வயல்களில் பாசி படர்ந்தும், பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் வளர்ச்சி குறைந்தும், கருகிய நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தா.பழூர் ஒன்றிய உதவி வேளாண் இயக்குனர் செல்வகுமார் மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் திருமலைவாசன் ஆகியோர் அணைக்குடி மற்றும் ஸ்ரீபுரந்தான் கிராம பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்டனர். இதுகுறித்து கிரீடு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் கூறியதாவது:-

மண், நீர் பரிசோதனை

ஆழ்துளை கிணற்று நீரின் உப்புத்தன்மை அதிகரிப்பின் காரணமாக வயல்களில் பாசிப்படர காரணமாகிறது. எனவே இதனை மேலாண்மை செய்ய கீழ்காணும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். இதையொட்டி களர் மற்றும் உவர் நிலங்களில் அவசியம் மண் மற்றும் நீரை பரிசோதனை செய்து மண்ணை சீர்திருத்தம் செய்து கார அமிலத்தன்மையை நடுநிலையாக்க வேண்டும். அதன்படி விவசாயிகள் உவர் மற்றும் களர் தன்மையை தாங்கி வளரும் நெல் ரகங்களான திருச்சி 1, திருச்சி 3, திருச்சி 4 மற்றும் கோ 43 போன்றவற்றை தேர்வு செய்து பயிர் செய்ய வேண்டும்.

நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் அடியுரமாக பாஸ்பேட் உரங்களான டி.ஏ.பி., கலப்பு உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் அதிகம் பயன்படுத்தப்பட்டால் பாசி மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாகி நாற்றுக்கள் கருகிவிடும் நிலை ஏற்படுவதால் பாஸ்பேட் உரங்களின் பயன்பாட்டை குறைத்து அதற்கு பாஸ்போ பாக்டீரியா உயிர் உரம் ஏக்கருக்கு ஒரு கிலோ இடுதல் வேண்டும். நடவுக்கு முன்னர் பசுந்தாள் பயிர்களான சணப்பை, தக்கைப்பூண்டு மற்றும் கொழிஞ்சி பயிரிட்டு 45 நாட்கள் கழித்து நிலத்தில் மடக்கி உழுதல் உடன் பசுந்தழை பயிர்களையும் இட்டு உழவு செய்தல் வேண்டும். மேலும் தொழு உரம் ஏக்கருக்கு குறைந்தது 5 டன் அடியுரமாக இடுதல் வேண்டும்.

பயிர்களின் வளர்ச்சி குறைவாக இருக்கும்

நாற்றங்கால் மற்றும் நடவு வயல்களில் நன்கு வடிகால் வசதிகளை ஏற்படுத்தி வைத்தல் அவசியம் ஆகும். புழுதி உழவு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் இட்டு 24 மணி நேரம் நீரை நிறுத்தி பின்னர் வடிகட்டுதல் மூலம் மண்ணில் உள்ள உப்பின் அளவை குறைப்பதோடு பாசிகளினால் ஏற்பட்ட மண் காற்றோட்டம் தடுப்பை சரி செய்கிறது. நாற்றங்கால் மற்றும் வயல்களில் அதிகபடியான நீர் தேக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் வயல் நீர் குழாய் அமைத்து நீரை சிக்கனமாக கடைபிடித்தல் அவசியமாகும்.

அடி உரம் இடும் பொழுது தொழு உரத்துடன் 200 கிலோ ஜிப்சம் மற்றும் 15 கிலோ ஜிங் சல்பேட் போன்றவற்றை தவறாமல் இடவேண்டும். மேலும் பாசியால் பாதிக்கப்பட்ட வயல்களில் பயிர்களின் வளர்ச்சி குறைவாக இருக்கும். எனவே பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை விட 20 முதல் 25 சதவீதம் கூடுதலாக இட வேண்டும். மேலும் பொட்டாஷ் உரத்தை ஏக்கருக்கு 30- 35 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.

வயல்களில் குட்டை அமைத்து...

பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்க வளர்ச்சி பருவத்தில் 1 சதவீதம் யூரியா மற்றும் 0.5 சதவீதம் ஜிங்க் சல்பேட்டை இலைவழி உரமாக தெளிக்கவும். பாசி அதிகம் படர்ந்துள்ள வயல்களில் கோனோவீடர், ரோட்டரி வீடர் மற்றும் பவர் வீடர் போன்ற களை எடுக்கும் எந்திரங்களை பயன்படுத்தி களையுடன் நிலத்தில் மடக்கி உழ வேண்டும். மேலும் காப்பர் சல்பேட் (மயில்துத்தம்) என்ற நுண்ணூட்ட உரம் ஒரு ஏக்கருக்கு 2-3 கிலோ வீதம் சிறு சிறு முடிச்சுகளாக பருத்தி துணியில் கட்டி சுமார் 50 இடங்களில் வீச வேண்டும். அல்லது நீர் வரும் பாசன வாய்கால்களில் பையில் சிறு சிறு துளைகள் இட்டு கட்டி விடுவதால் வயல் முழுவதும் பரவி பாசிகளின் வீரியத்தை கட்டுப்படுத்தி வேர்களுக்கு காற்றோட்டத்தை கொடுக்கும்.

உப்பு நிறைந்த ஆழ் குழாய் தண்ணீரை பயன்படுத்தும் பொழுது வயல்களில் குட்டை அமைத்து நீரை தேக்கி வைத்து பின்னர் நாற்றங்கள் மற்றும் வயல் பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story