மதுரை மேற்கு தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் என்ன?


மதுரை மேற்கு தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் என்ன?
x

மதுரை மேற்கு தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை

மதுரை,

மதுரை மேற்கு தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்கள் என்ன என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாலை வசதி

மதுரை மேற்கு தொகுதியில் 3-வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். மதுரை மேற்கு தொகுதியை, மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து முதன்மையான தொகுதியாக உருவாக்கிடும் வண்ணம் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செய்து இருக்கிறேன். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியமான திட்டங்களை தொடர்ந்து பெற்று வருகிறேன். காளவாசல் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கு தொகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கப்படுகின்றன. மாடக்குளம், துவரிமான், கீழமாத்தூர் ஆகிய கண்மாய்களில் தண்ணீர் தேக்குவதற்கு கொடிமங்கலத்தில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. மேற்கு தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் மேற்கு தொகுதியில் உள்ள மாநகராட்சி வார்டுகளுக்கு மட்டும் இல்லாமல், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இன்னும் 50 ஆண்டு காலம் குடிநீர் பிரச்சினையை இல்லாமல் இருக்க முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. சோலையழகுபுரம் முதல் அம்பேத்கர் நகர் வரை 973 வீடுகளுக்கு தமிழக வீட்டுவசதி வாரியம் மூலமாக வீட்டுமனை பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிக்கும் தருவாயில் உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி

மாடக்குளம், முனியாண்டிபுரத்தில் உள்ள மக்களுக்கு பாதாள சாக்கடை வசதி, தார் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை வசதி, நியாய விலைக்கடை, அங்கன்வாடி, சத்துணவுக் கூடம், போர்வெல் போன்று அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாடக்குளம், அய்யனார் கோவில் அருகில் சமுதாயக்கூடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பரவை, ஊர்மெச்சிக்குளத்தில் இருந்த தொடக்கப்பள்ளி, தற்போது உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

.சமயநல்லூரிலிருந்து துவரிமான் செல்வதற்கு வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. எனது தொகுதி மட்டுமின்றி நகரின் வளர்ச்சிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடிக்கு பணிகள் நடந்து வருகிறது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகை ஆற்றுக்கரையில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா க தரம் உயர்த்தப்பட்டு ரூ.345 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்தில் 365 நாட்களும் தண்ணீர் தேக்கி வைப்பதற்காக ஏ.வி.மேம்பாலம் அருகே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, சேவையாற்றி வருகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story