இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பதில்


இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும்? முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பதில்
x

கோப்புப்படம் 

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனியார் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது குறித்த கேள்விக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான். இது நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்சினைகள்தான் தலைதூக்கிக் காணப்படும். இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான் பா.ஜ.க அதிகம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பா.ஜ.க பெற்றுள்ளது.

பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பா.ஜ.க பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம். மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம்" என்றார்.


Next Story