காணாமல் போன 12 வயது சிறுமியின் கதி என்ன?


காணாமல் போன 12 வயது சிறுமியின் கதி என்ன?
x
தினத்தந்தி 19 May 2023 12:30 AM IST (Updated: 19 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கோவை ஒண்டிப்புதூரில் வீட்டின் முன்பு விளையாடிய 12 வயது சிறுமி திடீரென்று மாயமானார். காணாமல் போன அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்

கோவை ஒண்டிப்புதூரில் வீட்டின் முன்பு விளையாடிய 12 வயது சிறுமி திடீரென்று மாயமானார். காணாமல் போன அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

12 வயது சிறுமி

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சுதாகரன்(வயது 45). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சசிகலா, ஆசிரியை. இவர்களுக்கு 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ஸ்ரீநிதி 7-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் சுதாகரன் வழக்கம்போல் நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்றார். சசிகலா, வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது ஸ்ரீநிதி, தனது வீட்டின் முன்பு மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.

திடீர் மாயம்

அப்போது அவர் மதியம் 1.30 மணியளவில் திடீரென்று மாயமானார். விளையாடி கொண்டு இருந்த தனது மகளை காணாததால் சசிகலா அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனே அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் வீட்டுக்கு விரைந்து வந்து தனது மகளை நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகரன், இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். மாயமானது சிறுமி என்பதால் இந்த வழக்கு கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

தனிப்படைகள் அமைப்பு

இதற்கிடையே சிறுமி மாயமான தகவல் அந்த சிறுமியின் புகைப்படம், முகவரியுடன் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து அவரை கண்டுபிடிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் சிறுமி ஸ்ரீநிதி, ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு பஸ்சில் ஏறிச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.5-க்கு டிக்கெட்

வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்த ஸ்ரீநிதி தனது கையில் பணம் எதுவும் எடுத்துச்செல்லவில்லை என்பது தெரியவந்து உள்ளது. ஆனால் அவர் ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்தில் ஒரு தனியார் பஸ்சில் ஏறிச்செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதையடுத்து அந்த பஸ் கண்டக்டரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் ரூ.5-க்கு டிக்கெட் வாங்கி இருக்கிறார். ஆனால் அவர் எந்த பகுதியில் இறங்கி உள்ளார் என்பது தெரியவில்லை. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத அவர், எதற்காக திடீரென்று மாயமானார் என்பது தெரியவில்லை.

தீவிர விசாரணை

அந்த சிறுமி சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இறங்கவில்லை. அதுபோன்று டவுன்ஹால் பகுதியிலும் இறங்கவில்லை. அந்த பஸ் உக்கடத்துக்குதான் சென்றது. எனவே அவர் உக்கடத்தில் இறங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story