ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?


ரெயில் டிக்கெட் முன்பதிவில் நடப்பது என்ன?
x
தினத்தந்தி 22 Dec 2022 7:00 PM GMT (Updated: 22 Dec 2022 7:00 PM GMT)

பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள். இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

திண்டுக்கல்

ரெயில் நிலையம் சென்று டிக்கெட்டுகளை நேரடியாக எடுப்பதற்கு பதிலாக, கம்ப்யூட்டர், செல்போன்களில் இணையத் தளம் வழியாக முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.

திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விடுகிறார்கள். திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களுக்கு டிக்கெட் எடுக்க தட்கல் முறை கை கொடுக்கிறது.

தட்கல், பிரீமியம் தட்கல்

அதில் தட்கல் என்றும், பிரீமியம் தட்கல் என்றும் டிக்கெட் எடுக்க இரண்டு வழிகள் இருக்கின்றன.

பிரீமியம் தட்கல் முறை கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் ஆனது.

வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் தட்கல் கட்டணம், தூங்கும் வசதி கொண்ட சாதாரண பெட்டிகளுக்கு 10 சதவீதம் கூடுதலும், குளிர் சாதன வசதி கொண்ட உயர் வகுப்புகளுக்கு 30 சதவீதம் கூடுதலும் வசூலிக்கப்படுகிறது.

பிரீமியம் தட்கல் கட்டணம், புக்கிங் எண்ணிக்கையையும், குறைந்து வரும் சீட் எண்ணிக்கையையும் பொறுத்து மாறுபடும். எளிதாக சொல்லப்போனால், சீட்டுக்கான தேவை அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கும். சில நேரங்களில் சாதாரணக் கட்டணத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாகக் கூட உயரலாம்.

தட்கல், பிரீமியம் தட்கல் இரண்டுமே பயண தேதிக்கு ஒரு நாளுக்கு முன்பு, பதிவு செய்ய வேண்டும்.

ஏ.சி வகுப்பில் பயணம் செய்ய காலை 10 மணிக்கும், மற்ற வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல்புக்கிங் தொடங்கும்.

விளக்கம் இல்லை

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் நுழைந்தால், 'தட்கல்', 'பிரீமியம் தட்கல்' என்ற இரண்டு விருப்பப் பகுதிகள் இருக்கும்.

உதாரணமாக 100 டிக்கெட்டுகள் அதில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். பலர் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்து அந்த டிக்கெட்டை எடுக்க முயற்சிப்பார்கள்.

சிலர் மறுநாளே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். எனவே எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என்று பிரீமியம் தட்கல் விருப்பப் பகுதியில் நுழைவார்கள். அவர்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைத்துவிடும். ஆனால் சாதரண தட்கல் விருப்பப் பகுதியில் நுழைந்தவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஏதாவது பிரச்சினை வரும். அல்லது பிரீமியம் முறையில் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அதற்குள் 100 டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டதாக திரையில் காட்டிவிடும்.

இதற்கு காரணம் என்ன என்பது யாருக்கும் தெளிவாகத் தெரிவது இல்லை. யாரும் விளக்குவதும் இல்லை.

பயணிகள் குமுறல்

சாதாரண தட்கல் முறை, பிரீமியம் தட்கல் முறை, இந்த இரண்டையும் இயக்க வெவ்வேறு கம்ப்யூட்டர் சர்வர்கள் இருக்குமாம். பிரீமியம் முறைக்கான சர்வர் அதிவேகத்தில் இயங்குவதும், சாதாரண தட்கல் முறைக்கான சர்வரோ மெதுவாக இயங்குவதுமே அதற்கு காரணம் என்றும் சிலர் சொல்கிறார்கள். பிரீமியம் முறையில் அதிக கட்டணத்தை வசூலிக்கவே இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் ரெயில்வே அதிகாரிகள் அதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ரெயில் பயணிகளோ குமுறுகிறார்கள்.

இனி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க நிர்வாகி தேவதாஸ் (பழனி) :- சாமானிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் ரெயிலில் செல்கின்றனர். ஆனால் முன்பதிவு டிக்கெட்டுகள் எளிதில் கிடைப்பதில்லை. முன்பதிவு டிக்கெட் கிடைக்காதபட்சத்தில் பயண தேதிக்கு முந்தைய நாள் தட்கல் டிக்கெட் எடுக்கின்றனர். இந்த தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு ஒரே நேரத்தில் அனைவரும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு தட்கல் டிக்கெட் எடுக்கும் போது கடைசி நேரத்தில் பண பரிமாற்றம் ரத்தாகிறது. பின்னர் மீண்டும் தொடக்கத்தில் இருந்து தட்கல் டிக்கெட் எடுக்க முயற்சித்தால் கிடைக்காமல் போய்விடுகிறது. அதுபோன்ற அவசர தேவைக்காக பிரீமியம் தட்கல் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்கு அதிகபட்சமாக பணம் செலுத்த வேண்டியது இருக்கிறது. ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் தான் ரெயிலில் பலரும் பயணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் ஆம்னி பஸ்சை போன்று பிரீமியம் தட்கல் டிக்கெட் கட்டணம் இருக்கிறது. இதை ரெயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும். முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட்டுகளை அதிகப்படுத்த வேண்டும்.

மாற்றம் வேண்டும்

வணிகர் ராஜேந்திரன் (நிலக்கோட்டை) :- ரெயிலில் அவசரமாக செல்ல நேரும் போது தட்கல் டிக்கெட் எடுத்து செல்கிறோம். இந்த தட்கல் டிக்கெட் எடுப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. காலையிலேயே ரெயில் நிலையத்துக்கு சென்று காத்திருக்கும் நிலை உள்ளது. அவ்வாறு காத்து இருந்தாலும் ஒருசிலருக்கு மட்டுமே தட்கல் டிக்கெட் கிடைக்கிறது. இந்த தட்கல் டிக்கெட் கட்டணம், சாதாரண முன்பதிவு டிக்கெட்டை விட கூடுதலாக இருக்கிறது. இதற்கிடையே மக்களிடம் வியாபாரம் செய்வது போன்று பிரீமியம் தட்கல் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதை தவிர்த்து தட்கல் டிக்கெட்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் முன்பதிவு பெட்டிகளை அதிகரிக்க வேண்டும்.

பிரேமா சுந்தர் (திண்டுக்கல்) :- பெரும்பாலான மக்கள் ரெயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். ஆனால் தேவையான நேரத்தில் முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. இதனால் வேறுவழியின்றி தட்கல் டிக்கெட் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த தட்கல் டிக்கெட் என்பதே வணிக ரீதியானது தான். தட்கல் டிக்கெட் எடுப்பதற்கு ரெயில் நிலையம் சென்றால் கூட 5 முதல் 10 பேருக்கு கிடைப்பதே அரிதாக இருக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கூட தட்கல் டிக்கெட் எடுக்கமுடியவில்லை. அதிகபட்சம் 5 நிமிடங்களில் முக்கிய ரெயில்களில் தட்கல் டிக்கெட் தீர்ந்து விடுகிறது. இதனால் சாதாரண மக்களுக்கு தட்கல் டிக்கெட் கிடைப்பதே இல்லை. இதற்கிடையே பிரீமியம் தட்கல் டிக்கெட் என்பது முழுக்க, முழுக்க லாப நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது. அதனால் சாமானிய மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ரெயில்வே நிர்வாகம், ஒருசிலருக்கு மட்டுமே பயன்படும் பிரீமியம் தட்கல் டிக்கெட் முறையில் மாற்றம் வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story