சட்டவிரோத குவாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க அரசுக்கு கெடு


சட்டவிரோத குவாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க அரசுக்கு கெடு
x

சட்டவிரோத குவாரிகளின் மீது எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு இறுதியாக ஒருவாரம் கெடு விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

சட்டவிரோத குவாரிகளின் மீது எடுத்த நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு இறுதியாக ஒருவாரம் கெடு விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

தாமாக முன்வந்து விசாரணை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் இயங்குவதாக வந்த செய்திகளின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகம் முழுவதும் சட்டவிரோத குவாரிகளை தடுப்பதும், குவாரிகள் நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என்றும், இதுகுறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கேள்வி

அப்போது இந்த வழக்கில் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து நீதிபதிகள், ஏற்கனவே உத்தரவிட்டும் சட்டவிரோத குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தற்போது வரை தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யாதது மட்டுமல்ல, எந்தவிதமான பதிலும் தெரிவிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

ஒருவாரம் கெடு

அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒருவாரம் கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். அதன்பேரில், "இறுதியாக ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


Next Story