கிராம உதவியாளர் பணி முறைகேடு புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன? - லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கிராம உதவியாளர் பணி முறைகேடு புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன? - லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கிராம உதவியாளர் பணி முறைகேடு புகார் குறித்து எடுத்த நடவடிக்கை என்ன? என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிதம்பராபுரத்தை சேர்ந்த பிரிஸ்கலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

என் கணவர் கொரோனா தொற்றால் இறந்துவிட்டார். பின்னர் எட்டயபுரம் தாலுகாவில் 9 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியானது. இதில் 5 இடங்களுக்கு தனித்தனியாக விண்ணப்பித்தேன். 4 விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, கீழநாட்டுக்குறிச்சிக்கு மட்டும் பரிசீலிக்கப்பட்டது. ஆதரவற்ற விதவையான எனக்கு அந்த பணி வழங்காமல் நிராகரித்தனர். கிராம உதவியாளர் நியமனத்தில் பெரும் முறைகேடு நடந்து உள்ளது. இதுசம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரர் புகார் குறித்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என விளக்கம் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story