அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன?


அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன?
x

அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன? என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

அம்மா உணவகம்

அம்மா உணவகம் என்ற திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழகத்தில் தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திலும், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி அம்மா உணவகம் அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த அம்மா உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி, சாம்பாரும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதமும் தமிழக மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இட்லி ஒன்று 1 ரூபாய் வீதமும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் மற்றும் தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. மலிவு விலையில் உணவு கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் சாப்பிட்டு செல்கின்றனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி, வெளியூர் பயணிகளும் குடும்பத்துடன் சாப்பிட்டு செல்கின்றனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் புறநோயாளிகளும், மருத்துவமனையில் உள்நோயாளிகளுடன் தங்கியிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களும் வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

மேலும் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளதால், அங்கு படிக்கும் மாணவர்களில் சிலர் காலை, மதியமும் இந்த அம்மா உணவகத்துக்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இந்த அம்மா உணவகத்தில் மதியம் தயிர் சாதம் அதிகமாக விற்பனையாகிறது என்பதால், அதனை சரி செய்ய காலையில் பொங்கல் தயாரித்து 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த உணவகங்களில் பெரம்பலூரில் வாழும் ஏழை-எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், டிரைவர்கள், சுமை தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலானோர் சாப்பிட்டு வருகின்றனர். இந்த உணவகங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த அம்மா உணவகங்கள் பலரின் பசியை போக்கியது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலையில் உணவு

பெரம்பலூரில் செயல்பட்டு வரும் 2 அம்மா உணவகங்களிலும் அமர்ந்து சாப்பிடும் வகையில் இருக்கைகள் வசதி இல்லாததால் சிலர் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். இருக்கைகள் வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதியம் கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் வினியோகிக்கவும், இரவு நேரமும் உணவகம் செயல்பட வேண்டும் என்பது அங்கு சாப்பிடுபவர்களின் கோரிக்கையாக உள்ளது.

பெரம்பலூர் புதிய பஸ் நிலைய அம்மா உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்ட வெளியூர் பயணியான நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை சேர்ந்த ராஜ்குமார் மனைவி ஜெயமணி (வயது 35) கூறுகையில், எனது மகள் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார். அவளை பார்க்க 2 மாதத்துக்கு ஒரு முறை தனது கணவருடன் வருவேன். அப்போது காலை, மதியம் 2 வேளைகளிலும் இந்த உணவகத்தில் நாங்கள் சாப்பிட்டு செல்வோம். குடிக்க காவிரி குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. தூய்மையாகவும் உள்ளது. வெளியே ஓட்டலில் 2 வேளை சாப்பிட்டால் ஒரு நபருக்கு ரூ.100-க்கு மேல் ஆகும். மலிவு விலையில் உணவு கிடைப்பதால் அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறோம். மீதமுள்ள பணத்தை பஸ்சில் டிக்கெட் எடுக்க பயன்படுத்தி கொள்கிறோம். ஆனால் இந்த திட்டத்தை தொடங்கிய ஜெயலலிதாவின் புகைப்படங்கள் தற்போது அம்மா உணவகத்தில் அகற்றப்பட்டுள்ளது. இந்த உணவகங்களை மூடினால் பலர் பட்டினியாகும் நிலை ஏற்படும், என்றார்.

இருக்கை வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அம்மா உணவகத்தில் சாப்பிட்ட பெரம்பலூர் தாலுகா, அருமடல் கிராமத்தை சேர்ந்த அழகுத்துரை (45) கூறுகையில், என்னை போல் ஏழை, எளிய மக்களின் பசியை இந்த அம்மா உணவகம் போக்குகிறது. மருத்துவமனைக்கு வரும் போது இந்த அம்மா உணவகத்தில் தான் சாப்பிட்டு செல்வேன். என்னை போன்று மருத்துவமனைக்கு வரும் வெளியூரை சேர்ந்தவர்கள் நிறைய பேர் சாப்பிட்டு செல்கின்றனர். சாப்பிட்ட தட்டை வெந்நீரில் கழுவுகின்றனர். நோயாளிகள், வயதானவர்கள் நின்று கொண்டே சாப்பிட முடியாததால், அவர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், என்றார்.

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் கூறுகையில், மது குடித்து விட்டு சிலர் வந்து சாப்பிடுவதோடு, அவர்கள் இங்கு பணிபுரியும் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு செல்கின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றபடி தினமும் ஏராளமானவர்கள் வந்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர், என்றனர். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்படும் அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் கூறுகையில், தற்போது புதிய கட்டிடத்தில் உணவகம் செயல்படுவதால் தற்போது அம்மா உணவகம் இருப்பது குறித்து, அங்கு வருபவர்களுக்கு தெரிவதில்லை. எனவே அவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே அறிவிப்பு பதாகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story