அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன?


அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன?
x
தினத்தந்தி 19 Sep 2022 7:03 PM GMT (Updated: 19 Sep 2022 7:12 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் அம்மா உணவகங்களின் தற்போதைய நிலை என்ன? என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரியலூர்

அம்மா உணவகம்

அம்மா உணவகம் என்ற திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழகத்தில் தான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அம்மா உணவகம் உள்ளது. இதில் 8 பேர் பணிபுரிந்து வருகின்றனர். காலை 5 மணிக்கு பணியை தொடங்கி 7 மணிக்குள் ஆயிரம் இட்லிகள், சாம்பார் தயார் செய்கின்றனர். மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் சிகிச்சைக்கு வருபவர்கள் உள்பட அனைவருக்கும் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு சாம்பார் சாதம் 5 ரூபாயும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.கைகாட்டியை சேர்ந்த தங்கையன்(65) கூறுகையில், நான் தினசரி காலை மற்றும் மதிய உணவு சாப்பிட அதிகபட்சம் ரூ.15 மட்டுமே செலவு ஆகிறது. மருத்துவர்கள் இட்லி சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். குறைந்த விலையில் தரமாக உணவு இங்கு கிடைப்பதால் வயிற்றுக்கு கெடுதலில்லாமல் விரைவில் வீடு திரும்ப முடிகிறது என்றார். உணவகத்தின் பொறுப்பாளர் ரோனிகாமேரி கூறுகையில், இங்கு சுமார் 150 பேருக்கு மேல் உணவு வாங்க வருவதாகவும், சுகாதாரமான முறையில் அவர்களுக்கு சமையல் செய்து தருவதாகவும் கூறினார். அரியலூர் பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் காலையில் சுமார் ஆயிரத்து 500 இட்லிகள், மதியம் சுமார் 500 தயிர், 800 சாம்பார் சாதங்கள் விற்பனையாகிறது என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.இதில் தினமும் குறைந்தது 500 பேர் பயன் அடைகின்றனர்.

ஏழைகளுக்கான உணவகம்

ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்திற்கு தினமும் காலை உணவு சாப்பிட சுமார் 70 பேரும், மதிய உணவு சாப்பிட 100 பேரும் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு காலையில் இட்லி, பொங்கல் வழங்கி வருகின்றனர். மதியம் சாம்பார், தயிர் சாதம் வழங்கப்படுகிறது. இதில் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் அம்மா உணவகத்திற்கு வந்து பசியாறி செல்கின்றனர். இதில் தினமும் அம்மா உணவகத்திற்கு வந்து காலை மட்டும் சாப்பிட்டு விட்டு கூலி வேலைக்கு செல்லும் ஜெயங்கொண்டம் அருகே இடையாறு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான கோபிநாத் கூறுகையில், இங்கு குறைந்த விலையில் நல்ல முறையில் உணவு வழங்குகின்றனர். இதனால் தினமும் காலை மட்டும் இங்கு சாப்பிட்டுவிட்டு வேலைக்கு செல்வேன். அதில் மீதம் அடையும் பணத்தை கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி தருகிறேன். இதனால் வீட்டில் உள்ளவர்கள் 3 வேளையும் பசியாறுகின்றனர். என்றைக்காவது வேலை இல்லை என்றால் மதியமும் இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்வேன். என்னைப்போன்றவர்களும், ஆதரவற்ற முதியவர்களும் இந்த அம்மா உணவகத்தால் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர் என்றார்.

அதே பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வரும் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோடு தெருவை சேர்ந்த சரவணன் மனைவி தேவி கூறுகையில், நான் காய்கறி கடையில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எனது கணவரும் கூலி வேலைதான் செய்து வருகிறார். அவருக்கு தினமும் வேலை கிடையாது. யாராவது கூப்பிட்டு சென்றால் தான் வேலை. குறைவான சம்பளத்தில் குடும்பம் நடத்தி வருவதினால் அம்மா உணவகத்தில் 2 வேளையும் சாப்பிட்டு பசியாறி வருகிறேன். அம்மா உணவகம் இல்லை என்றால் தற்போது உள்ள விலைவாசி உயர்வால் என்னை போன்ற ஏழைகள் பட்டினியாக கிடக்கும் நிலை ஏற்படும். காலை வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து கொடுத்துவிட்டு பஸ்சுக்காக காத்திருக்கும் வேலையில் அம்மா உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். ஏழைகளுக்கு அம்மா உணவகம் பெரிதும் உதவியாக உள்ளது. இது ஏழைகளுக்கான உணவகம் என்றார்.

ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் கூறுகையில், உணவகத்திற்கு சரஸ்வதி, லட்சுமி என்ற 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வழிகாட்டுதலின்படி தினமும் சிறந்த முறையில் உணவு சமைக்கப்படுகிறது. இங்கு முதியவர்கள் அதிக அளவில் வருவதினால் அவர்கள் அமர்ந்து உணவு அருந்தும் வகையில், இருக்கைகள் அமைத்து கொடுத்தால் அவர்கள் பெரிதும் பயன் அடைவார்கள். உடல்நிலை முடியாதவர்கள் தரையில் அமர்ந்து உண்ணும்போது அவர்களுக்கு சாப்பிட்டு முடித்த பிறகு எழுந்திரிக்க சிரமமாக உள்ளது. எனவே இருக்கைகள் அமைத்து கொடுக்க வேண்டும். அம்மா உணவகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை எப்போதும் உள்ளது போலவே உள்ளது. சில நாட்களில் அதிகமானவர்கள் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். அவர்களுக்கும் தேவையான உணவை சமைத்து கொடுத்து வருகிறோம் என்றனர்.


Next Story