வாணாபுரம் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பேர் கதி என்ன?
வாணாபுரம் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பேர் கதி என்ன என்பது தெரியாததால் அவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
வாணாபுரம்
வாணாபுரம் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்ற 2 பேர் கதி என்ன என்பது தெரியாததால் அவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
ஏரி
வாணாபுரம் அருகே உள்ள கொட்டையூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானஏரி உள்ளது. இந்த ஏரியில் தற்போது தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் அதிகளவில் மீன்கள் உள்ளது.
சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் ஏரிக்கு வந்து மீன் பிடித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் குங்கிலியநத்தம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 42), இவரது உறவினரான விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (37) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மீன்பிடிக்க சென்றனர்.
நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஏரிக்குச் சென்றனர். ஆனால் அவர்களை காணவில்லை.
போலீசார் விரைவு
ஏரி கரையில் இருவரது உடைகள் மற்றும் செல்போன் செருப்பு உள்ளிட்டவைகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அப்பகுதியில் தேடி பார்த்தனர்.
இது குறித்து வாணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார், தண்டராம்பட்டு தீயணைப்பு வீரர்கள் ஏரிக்கு நேரடியாக வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். மீன்பிடிக்கும்போது தவறி விழுந்திருக்கலாம் என்பதால் தொடர்ந்து காலை முதல் தேடி வரும் நிலையில் அவர்ககளை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.
தொய்வு
ஏரியில் அதிக அளவில் செடி கொடிகளும், தாமரை செடிகளும் வளர்ந்துஇருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரி மிகவும் ஆழமாக இருப்பதால் பரிசலில் இறங்கி தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
மேலும் இருவரும் மீன் பிடிக்க ஏரியில் இறங்கினார்களா? அல்லது வேறு எங்கேயாவது சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.