நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலைநாள் எது? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலைநாள் எது? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
x

கோப்புப்படம்

நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலைநாள் எது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிந்து, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதையடுத்து பிற வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடத்துவதற்கான முயற்சியில் கல்வித்துறை ஈடுபட்டுவருகிறது.

அந்தவகையில், எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வு 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரையிலும், 4 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்கள், உள்ளூர்நிலைக்கு ஏற்றவாறும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டங்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மற்றும் தங்களுடைய உள்ளூர்நிலைக்கு ஏற்றவாறும் தேர்வு நாட்களை வருகிற 10-ந் தேதி (நாளை) முதல் 28-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மொத்தத்தில் ஆண்டு இறுதித்தேர்வை வருகிற 28-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், அன்றைய நாள்தான் நடப்பு கல்வியாண்டின் கடைசி வேலைநாள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாத இறுதியில் நடக்கும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் ஆசிரியர், பெற்றோரிடம் அவர்களுடைய குழந்தைகளின் வருகை, கற்றல்நிலை, உடல்நலம், மனநலம், கல்வி இணைச் செயல்பாடுகள், கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன், கற்றல் அடைவு சார்ந்த நடவடிக்கைகள் குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story