மாநில அரசின் சிப்காட் தொழில் பூங்கா திட்டத்தின் நிலை என்ன?

மாநில அரசின் தொழில் பூங்கா திட்டத்தின் நிலை குறித்து அரசு விளக்க வேண்டுமென தொழில்முனைவோர், வேலை நாடுனர் வலியுறுத்தி உள்ளனர்.
மாநில அரசின் தொழில் பூங்கா திட்டத்தின் நிலை குறித்து அரசு விளக்க வேண்டுமென தொழில்முனைவோர், வேலை நாடுனர் வலியுறுத்தி உள்ளனர்.
தொழில் பூங்கா
விருதுநகர்- சாத்தூர் இடையே கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்காக 2000 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்ட நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. அரசு தொழிற்பூங்காவிற்க்கான நிலப்பரப்பினை 1,500 ஏக்கராக குறைத்தது.
இந்தநிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பின் கடந்த ஆண்டு தொழில் மானிய கோரிக்கையின் போது விருதுநகர்- சாத்தூர் இடையே தொழில் பூங்கா அமைக்கப்படும் என மீண்டும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இ குமாரலிங்காபுரம் அருகே சிப்காட் தொழில் பூங்கா என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
ஜவுளி பூங்கா
கடந்தாண்டு இறுதியில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கோவையில் ஒரு நிகழ்ச்சியின் போது விருதுநகர் அருகே பட்டம்புதூரில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமென அறிவித்தார். மாவட்ட பா.ஜ.க.வினரும் இத்திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டுமென பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
தற்போது மத்திய அரசு விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுமென அதிகார பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள 1,050 ஏக்கர் நிலப்பரப்பில் மத்திய அரசின் ஜவுளி பூங்காவை அமைக்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொழில் பூங்கா திட்டம் மற்றும் ஜவுளி பூங்கா திட்டத்தின் நிலை என்ன என்பது பற்றி தமிழக தொழில்துறை விளக்கமளிக்க வேண்டுமென தொழில் முனைவோரும் படித்த இளைஞர்களும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மத்திய அரசு அறிவித்துள்ள ஜவுளி பூங்கா திட்டத்தால் மாநில அரசின் தொழில் பூங்கா திட்டத்தினை கைவிடக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






