மழை, வெயிலில் இருந்து நெல் மூடைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
மழை, வெயிலில் இருந்து நெல் மூடைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மழை, வெயிலில் இருந்து நெல் மூடைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கால தாமதம்
மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருந்ததாவது:-
இந்த ஆண்டு நன்றாக நெல் விளைந்துள்ளது. மேலூர் பகுதியில் நெல் பயிர் தற்போது அறுவடைக்காக தயார் நிலையில் உள்ளது. நெல் மணிகளை அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
நெல் மூடைகளை பாதுகாக்கும் பொருட்டு நெல் கிடங்குகள், பாதுகாப்பு மையங்கள் எங்கள் பகுதியில் இல்லை. விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல் மணிகள் வெயிலிலும், மழையிலும் நனைந்து வீணாகி விடுகின்றன.
நடவடிக்கை இல்லை
இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் நெல் கிடங்குடன் கூடிய பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயிகளின் நலன் கருதி எனது மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், நெல் மூடைகள் பல்வேறு மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாவதாக செய்திகள் வெளியாகின்றன. அந்த இடங்களில் எல்லாம் தற்போதைய நிலை என்ன? என கேள்வி எழுப்பினர்.
பின்னர் இதுகுறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.