சட்டவிரோத விளம்பர பலகைகளை தடுக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


சட்டவிரோத விளம்பர பலகைகளை தடுக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x

சட்டவிரோத விளம்பர பலகை மற்றும் கட்-அவுட்டுகள் வைப்பதை தடுக்க மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் என்ன நடைமுறையை பின்பற்றுகின்றன? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக வைக்கப்படும் விளம்பர பலகைகள் மற்றும் கட்-அவுட்டுகளை அகற்றக்கோரி மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வழக்குகள் பல தொடர்ந்தார்.

அதேபோல, பள்ளிக்கரணை பகுதியில் அ.தி.மு.க. பிரமுகர் இல்லத் திருமண நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட விளம்பர பலகை விழுந்து இளம்பெண் பலியானது, விழுப்புரத்தில் தி.மு.க. நிர்வாகியின் வீட்டு நிகழ்ச்சிக்காக அமைச்சரை வரவேற்று கொடிக்கம்பம் நாட்டியபோது 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

வரும்முன் காப்போம்

இந்த வழக்குகள் எல்லாம் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிராபிக் ராமசாமிக்குப் பதிலாக இந்த வழக்கை தொடர்ந்து நடந்த அனுமதி கோரி வக்கீல் அரவிந்த் மனு தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் மாநில அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, "தமிழ்நாட்டில் விளம்பர பலகை கலாசாரத்தை ஒழிக்க தற்போதைய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விழுப்புரம் சம்பவத்தைப் பொறுத்தமட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், 'சட்டவிரோதமாக சாலைகளில் வைக்கப்படும் விளம்பர பலகைகளால் விபத்துகள் நடந்து, அதன்பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைவிட வரும்முன் காப்போம் என்ற ரீதியில் சட்டவிரோத விளம்பர பலகைகளை தடுப்பது அரசின் கடமை' என்றனர்.

அரசின் கடமை

மேலும், "சட்டவிரோத விளம்பர பலகை மற்றும் கட்-அவுட்டுகள் வைப்பதை தடுக்க மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் என்ன நடைமுறையை பின்பற்றுகின்றன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், "சட்டவிரோத விளம்பர பலகைகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர்.

விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


Next Story