தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் பின்பற்றவேண்டியவை என்ன? சென்னை கலெக்டர் விளக்கம்


தீபாவளி பண்டிகையையொட்டி பலகாரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் பின்பற்றவேண்டியவை என்ன? சென்னை கலெக்டர் விளக்கம்
x

தீபாவளி பண்டிகையையொட்டி, பலகாரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் பின்பற்றவேண்டியவை என்ன? என்பது குறித்து சென்னை கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை கலெக்டர் எஸ்.அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிகமாக திருமண மண்டபங்களில் பெரிய அளவில் இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட அனைத்து இனிப்பு, கார வகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று, பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்பட பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ உபயோகிக்கக்கூடாது. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் காலாவதி இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது. விற்பனைக்காக காட்சி படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வகையில் அச்சடித்து காட்சிப்படுத்தவேண்டும். உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீது, பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை அச்சடித்து இருத்தல் வேண்டும்.

ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் விற்பனை செய்யவேண்டும். பண்டிகை காலத்தில் பலகாரம் தயாரிப்பவர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் பதிவு உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். இனிப்பு மற்றும் கார வகைகள், பலகாரங்கள் வாங்கும்போது உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற உணவு நிறுவனங்களில் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களில் விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உணவு தொடர்பான புகார்கள் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story