நிலத்தடிநீரை வணிகநோக்கில் எடுப்பதை வரைமுறைப்படுத்த என்னென்ன நடவடிக்கை?-நீர்வளத்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நிலத்தடிநீரை வணிகநோக்கில் எடுப்பதை வரைமுறைப்படுத்த என்னென்ன நடவடிக்கை? என்பது குறித்து நீர்வளத்துறை செயலாளர் பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நிலத்தடிநீரை வணிகநோக்கில் எடுப்பதை வரைமுறைப்படுத்த என்னென்ன நடவடிக்கை? என்பது குறித்து நீர்வளத்துறை செயலாளர் பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அனுமதியின்றி நிலத்தடி நீர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆனையூர் பகுதியை சேர்ந்த கருணாகரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சிவகாசி அண்ணாமலையார் காலனி பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு தேவையான தண்ணீரை பெற, அவரவர் வீடுகளில் ஆழ்துளை கிணறு அமைத்து உள்ளோம். ஆனால் இந்த பகுதியில் பாழடைந்து கிடந்த கிணற்றை திடீரென மராமத்து செய்து, அதில் இருந்து தண்ணீரை எடுத்து வணிக நோக்கில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு உரிய அனுமதி பெறவில்லை. இரவும், பகலும் தண்ணீர் எடுத்து வருவதால் எங்கள் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எனவே அனுமதி இல்லாமல், குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
வழிகாட்டுதல்கள் இல்லை
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் மாரீஸ் குமார் ஆஜராகி, ஊரக பகுதிகளில் நிலத்தடி நீரை எடுப்பதற்கு போதுமான வழிகாட்டுதல்களோ, கட்டுப்பாடுகளோ ஏற்படுத்தவில்லை. இதை பயன்படுத்தி ஒரு கும்பல் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து வணிக ரீதியாக பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்த வழக்கில் நீர்வள ஆதாரத்துறை செயலாளரை, இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து சேர்க்கிறது. நிலத்தடி நீரை வணிக ரீதியாக எடுப்பது தொடர்பாக அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? நிலத்தடி நீரை வணிக ரீதியாக எடுப்பதை வரைமுறைப்படுத்த வழிகாட்டுதல்கள் கொண்டு வருவது குறித்து அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?
வணிக ரீதியாக தண்ணீர் எடுக்க விண்ணப்பித்தால் தடையில்லாச் சான்றிதழ், அனுமதி வழங்குவதற்கு உள்ளூர் மட்டத்தில் தகுதியான அதிகாரி யார்?
பதில் அளிக்க உத்தரவு
உரிமம் பெற்றவர்கள் விதி மீறலில் ஈடுபட்டால் அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? ஆகிய கேள்விகளுக்கு நீர்வள ஆதாரத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.