மடத்துக்குளம் பகுதியில் என்ன பயிர் சாகுபடி செய்யலாம்?
மடத்துக்குளம் பகுதியில் நடப்பு பருவத்தில் என்ன பயிர் சாகுபடி செய்யலாம் என்று வேளாண்மைத்துறையினர் வழிகாட்ட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
போடிப்பட்டி,
மடத்துக்குளம் பகுதியில் நடப்பு பருவத்தில் என்ன பயிர் சாகுபடி செய்யலாம் என்று வேளாண்மைத்துறையினர் வழிகாட்ட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வடகிழக்குப் பருவமழை
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.அமராவதி ஆற்றுப் பாசனம், வாய்க்கால் பாசனம், இறவைப் பாசனம் என பல பாசன முறைகளில் விவசாயிகள் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த பகுதியில் மானாவாரியில் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தநிலையில் நடப்பு பருவத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்து மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்வதில் விவசாயிகளுக்கு தயக்கம் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர்களுக்கு அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நடப்பு பருவத்தில் தென்மேற்குப் பருவமழை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.முழுக்க முழுக்க வடகிழக்குப் பருவமழையையே நம்பியிருக்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் குழப்பம்
அமராவதி பிரதான கால்வாயில் உயிர் தண்ணீர் திறப்பு சற்று தாமதமாகி விட்டது.முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டிருந்தால் அதனைப் பயன்படுத்தி பெருமளவு விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்திருப்பார்கள். இது நிலைப்பயிர்களைக் காப்பாற்றும் சிறப்பு நனைப்புக்கான நீர் திறப்பு என்றாலும் கடந்த காலங்களில் மக்காச்சோள சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதற்கும் பெருமளவில் உதவியாக இருந்துள்ளது.ஆனால் தற்போது சாகுபடியைத் தொடங்கினால் பருவமழை தீவிரமடையும் போது பயிர் சேதம் ஏற்பட்டு விளைச்சல் குறையக் கூடும் என்ற அச்சம் விவசாயிகளிடையே உள்ளது.ஒருசில பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நமது பகுதியில் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.
அத்துடன் ஒருசில வானிலை முன் பருவக் கணிப்புகளில் நடப்பு பருவத்தில் வடகிழக்குப் பருவமழை குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.இதனால் மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாமா?அதனைத் தவிர்த்தால் என்ன பயிர் சாகுபடி செய்யலாம் என்று விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.எனவே வேளாண்மைத்துறையினர் என்ன பயிர் சாகுபடி செய்யலாம்? எப்போது தொடங்கலாம்? என்பது குறித்து வழிகாட்டல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.