ஜெயலலிதா மரணத்துக்குகாரணம் என்ன? எய்ம்ஸ் மருத்துவக்குழு பரபரப்பு தகவல்


ஜெயலலிதா மரணத்துக்குகாரணம் என்ன? எய்ம்ஸ் மருத்துவக்குழு பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 20 Aug 2022 8:11 PM GMT (Updated: 21 Aug 2022 3:29 AM GMT)

அப்பல்லோ சிகிச்சையில் தவறு இல்லை என சுட்டிக்காட்டி உள்ள எய்ம்ஸ் மருத்துவக்குழு ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதா மரணம்

முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்த போராட்டம் நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார்.

எய்ம்ஸ் மருத்துவக்குழு

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவடைந்த நிலையில் இறுதி அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தக்குழு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆணையத்தில் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றை தீவிரமாக பரிசீலித்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளது.

5 நாட்கள் காய்ச்சல்

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக 5 முதல் 7 நாட்கள் அவருக்கு காய்ச்சல் மற்றும் குடல் இயக்க பாதிப்பு இருந்துள்ளது. 1998-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த அவரது குடும்ப டாக்டரான சிவக்குமார் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி முதல்-அமைச்சரின் உடல்நிலையை பரிசோதித்துள்ளார்.

மூச்சுத்திணறல்

அதே ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவு 10 மணிக்கு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவருக்கு மூளையின் செயல்திறன் குறைந்து ஆக்சிஜன் அளவு 48 சதவீதமும், நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 88 என்ற அளவிலும், ரத்த அழுத்தம் 140/70 என்ற அளவிலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாகவும் இருந்துள்ளது.

முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே அப்பல்லோ ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது.

சுவாசக்குழாயில் தொற்று

இருதய துடிப்பை கட்டுப்படுத்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. செப்டம்பர் 28-ந்தேதி ஜெயலலிதா உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின்பு உடல்நிலை சீரானது.

இடையிடையே சில நாட்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. அவ்வப்போது அவரது உடல்நிலை பாதிப்புக்கு ஏற்ப உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்கு பேச்சு பயிற்சி அளிக்க மேற்கொண்ட முயற்சியும் பலன் அளித்துள்ளது.

பாக்டீரியா பாதிப்பால் சுவாசக்குழாயில் தொற்று ஏற்பட்டதும் மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிகிறது. நுரையீரல் பாதிப்பு ஜெயலலிதாவின் உடல்நிலையில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

மாரடைப்பு

டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அன்றைய தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

சி.பி.ஆர். எனப்படும் இருதய பகுதியில் அழுத்தம் கொடுக்கும் சிகிச்சையை தொடர்ந்து எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 24 மணி நேரமும் எக்மோ சிகிச்சைக்கு ஜெயலலிதா உட்படுத்தப்பட்டார். இருந்தபோதிலும் டிசம்பர் 5-ந்தேதி இரவு 11.30 மணிக்கு அவரது மூளை மற்றும் இதயம் செயலிழந்து உயிர் பிரிந்தது.

ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட சிகிச்சைகள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.

இருதய செயலிழப்பு

முடிவில், ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்பு தான் அவரது மரணத்துக்கு காரணம் என்பது தெளிவாக தெரிகிறது.

ஒவ்வொரு நிலையிலும் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் தேவையோ அத்தனை மருத்துவ பரிசோதனைகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என்பது மருத்துவ சிகிச்சை ஆவணங்கள் மூலம் தெரிகிறது.

கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய்

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவருக்கு சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், தலைசுற்றல், தைராய்டு, மரபுவழி தோல் அழற்சி, குடல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நரம்பு தளர்ச்சி போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

தோல் நோய்க்காக அவருக்கு ஸ்டீராய்டு எனப்படும் வலி நிவாரணி மருந்து கொடுக்கப்பட்டிருப்பது ஆஸ்பத்திரியின் ஆவணம் மற்றும் டாக்டர்களின் வாக்குமூலத்தில் தெரிகிறது.

சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, ஜெயலலிதாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்ததாகவும், ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக திராட்சை பழம், கேக், இனிப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்ததாகவும் ஜெயலலிதாவின் குடும்ப டாக்டரான சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மற்றும் ஆணையத்தின் விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில் விரைவில் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் நீதிபதி ஆறுமுகசாமி தாக்கல் செய்ய உள்ளார்.


Next Story