எந்த துறையாக இருந்தாலும், முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும்


எந்த துறையாக இருந்தாலும், முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும்
x
தினத்தந்தி 19 Aug 2023 7:15 PM GMT (Updated: 19 Aug 2023 7:15 PM GMT)

எந்த துறையாக இருந்தாலும், முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும்

கோயம்புத்தூர்

கோவை

எந்த துறையாக இருந்தாலும், இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும் என்று கோவையில் ஸ்டார்ட்-அப் திருவிழாவை காணொலியில் தொடங்கிவைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஸ்டார்ட்-அப் திருவிழா

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் 2 நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் திருவிழா நேற்று தொடங்கியது. இதில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் 450 ஸ்டால்கள் இடம் பெற்று உள்ளன. விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் நடத்துகிற "தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் திருவிழா" நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் என்னால் நேரில் கலந்து கொண்டு உங்களோடு பேச முடியவில்லை. அதில் எனக்கு வருத்தம் தான். ஆனாலும் எனது எண்ணங்கள் முழுக்க அங்கே தான் இருக்கிறது. இந்த துறையின் கடந்த 2 ஆண்டுகால வளர்ச்சிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உழைப்பே சான்று. கல்வி சிறந்த தமிழ்நாடு கலைகள் சிறந்த தமிழ்நாடு என்பதுபோல தொழில்கள் சிறந்த தமிழ்நாடு என்கிற நிலையை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம்.

பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுடனான தொழில்நிறுவனங்கள் முக்கியம்தான். ஆனால் சிறு,குறு தொழில்களின் வளர்ச்சி அதைவிட முக்கியமானது. அந்த வகையில், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் திராவிடமாடல் அரசு அக்கறை செலுத்துகிறது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்

தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பையும், தொழில்கட்டமைப்பையும் மேம்படுத்தியவர் கலைஞர். அவருடைய நூற்றாண்டில் "சமூகநீதியுடன் கூடிய சமச்சீர் தொழில் வளர்ச்சி" என்ற அடிப்படையில் இதுவரை நடக்காத அளவு பிரம்மாண்டமாக பல்வேறு புத்தொழில் வளர்ச்சி சார்ந்த கருத்தரங்குகளையும், கண்காட்சியையும் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து, இந்த நிகழ்ச்சியை நான் கோவையில் நடத்த கேட்டுக் கொண்டேன். ஏன்னென்றால் கோவைதான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் சுமார் 450 அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டு, பார்வையிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களும், ஆர்வலர்களும், மாணவர்களும் வர இருக்கிறார்கள். புத்தொழில்கள் மற்றும் முதலீடுகள் பற்றி நடக்க இருக்கிற கருத்தரங்குகள், சந்திப்புகளில் சுமார் 1,500 பங்கேற்பாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். 50-க்கும் மேற்பட்ட வல்லுனர்களின் கருத்துரைகள் இடம்பெற இருக்கிறது. இது பிரமிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

முதன்மை மாநிலமாக திகழ வேண்டும்

2021 மார்ச் மாத நிலவரப்படி சுமார் 2,300 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மட்டுமே தமிழ்நாட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு எடுத்த முயற்சிகளின் பலனாக, இந்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 மடங்காகி தற்போது 6,800-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

தொழில்துறை மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும், அதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அதற்காக நம்முடைய அரசு எடுக்கிற முயற்சிகளுக்கு துணைநிற்கின்ற வகையில், இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது. இது தொடர வேண்டும். புத்தாக்க சிந்தனையோடு தொழில் முனைவில் ஈடுபடுகிற தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு, 'டான்சீட்' எனும் தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடிக்கும் மேல், நிதி வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

ரூ.50 கோடி சிறப்பு நிதி

புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, பெரு நகரங்களைத் தாண்டி மாநிலத்தின் எல்லா பகுதிகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 2022-23-ம் நிதி ஆண்டு மதுரை, ஈரோடு மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில், வட்டாரப் புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் சேலம், ஒசூரு, கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 2-ம், 3-ம் கட்ட நகரங்களிலும் வட்டாரப் புத்தொழில் மையங்களை நிறுவிட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

சமூக நீதியை நிறைவேற்றும் வகையில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக ஆதிதிராவிட மக்களால நிறுவப்படுகிற புத்தொழில் நிறுவனங்களுக்கு பங்கு முதலீடாக வழங்க கடந்த நிதி ஆண்டு ரூ.30 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஆண்டு, இந்த சிறப்பு நிதி ரூ.50 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. புதுயுகத் தொழில் முனைவில் ஈடுபடுகிற தொழில் முனைவோர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்கள் அவசியம் என்பதால், தகுதி வாய்ந்த வர்களுக்கு வழிகாட்டவும், தொழில் முனைவோர்களையும் இணைப்பதற்காக, மென்டர் டி.என். என்ற வழிகாட்டி மென்பொருள் தளத்தையும் தொடங்கி இருக்கிறாம்.

சென்னை முதலிடம்

மேலும், முதலீட்டாளர்களையும், புத்தொழில் முனைவோர்களையும் இணைப்பதற்காக முதலீட்டாளர் இணைப்பு தளம் தொடங்கப்பட்டு அதன் வழியாக பல முதலீட்டாளர் தொழில் முனைவோர் இணைப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. துணிகர முதலீடுகளை ஈர்ப்பதில், கடந்த ஜூலை மாத தரவுகள் அடிப்படையில், இந்திய நகரங்களிலேயே சென்னை முதலிடத்தில் இருக்கிறது. மந்தமான முதலீட்டுச் சூழலிலும் சென்னை சார்ந்த நிறுவனங்கள் மேல் முதலீட்டாளர்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை இது காட்டுகிறது.

மக்கள் நம்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை காப்பாற்ற தான் அதிகாரங்கள் பயன்பட வேண்டும் என்று நினைத்து செயல்பட்டு வருகிறேன். தமிழ்நாட்டில் புத்தொழில் முனைவோர்களுக்கு, உலகளாவிய முதலீடு மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடு, உலக வர்த்தக மையமாக மாறிவரும் துபாயில் ஒருங்கிணைப்பு மையம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது.

தமிழ்நாட்டை புத்தொழில் நிறுவனங்களுக்கேற்ற மாநிலமாக மாற்றி உலகின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம்.

நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகுதான் மத்திய அரசின் ஸ்டார்ட்-அப் இந்தியா அமைப்பு வழங்குகிற லீடர் அங்கீகாரம் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள்

முன்னதாக விழாவுக்கு தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலை வகித்தார். விழாவில் புதிய பெண்தொழில் முனைவோர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி மென் பொருள் தளம் தொடங்கி வைக்கப்பட்டது. கண்காட்சியில் மருத்துவ உபகரணங்களை எடுத்து செல்லும் நவீன டிரோன் இடம் பெற்று இருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

விழாவில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசுச் செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இயக்குனர், தலைமை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story