ரேஷன் கடைகளில் கோதுமை கிடைப்பதில்லை


ரேஷன் கடைகளில் கோதுமை கிடைப்பதில்லை
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:45 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை சரிவர கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தின் கீழ் கோதுமை வழங்க கடந்த ஆட்சியில் உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை வழங்கப்படுகிறது.

இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக்குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகள் குறித்து 1967 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் மக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

கோதுமை கிடைப்பதில்லை

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1,254 ரேஷன் கடைகள் உள்ளன. இதன் மூலம் 6,08,348 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இதில் விருப்பத்தின்பேரில் அரிசிக்கு பதில் கோதுமை வாங்கிக்கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இக்கடைகளில் தற்போது கடந்த சில மாதங்களாக 2 மாதங்களுக்கு ஒருமுறை தான், கோதுமை வழங்கப்பட்டு வருவதாகவும், கள்ளச்சந்தையில் கோதுமை விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் சரிவர கோதுமை கிடைக்காமல் குடும்ப அட்டைதாரர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

எனவே கண்காணிப்புக்குழுவினர், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் கோதுமை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேநேரத்தில் ரேஷன் கோதுமை வெளிச்சந்தையில் விற்கப்படுகிறதா? என்பதையும் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story