கோதுமை விலை குறைய தொடங்கியது


கோதுமை விலை குறைய தொடங்கியது
x

மத்திய அரசின் நடவடிக்கையால் கோதுமையின் விலை குறைய தொடங்கியுள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

விருதுநகர்


மத்திய அரசின் நடவடிக்கையால் கோதுமையின் விலை குறைய தொடங்கியுள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

வெளிச்சந்தை விற்பனை

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-

மத்திய அரசு கோதுமை விலை உயர்ந்து வருவதை கட்டுப்படுத்த இந்திய உணவுக்கழகம் மூலம் கூடுதலாக 50 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தை விற்பனை முறையில் மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.அந்த வகையில் கடந்த 16-ந் தேதி நடந்த இந்திய உணவுக்கழக ஏலத்தில் 2.04 லட்சம் டன் ஏலம் மூலம் விற்பனை செய்ய இந்திய உணவுக்கழகம் முன்வந்த நிலையில் 1.52 லட்சம் டன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை விலையும் கடந்த ஏலங்களை விட குறைவாகவே இருந்துள்ளது.

விலை குறைந்தது

கடைசியாக நடந்த ஏலத்தில் குவிண்டால் ரூ.2,254.71-க்கு விற்பனையான நிலையில் இந்த ஏலத்தில் குவிண்டால் ரூ.2,155.96-க்கு விற்பனையாகியுள்ளது. கடந்த 16-ந் தேதி இந்திய உணவு கழகத்தின் கோதுமை ஏலத்தில் அனைத்து மாநிலங்களிலும் கோதுமையின் விலை குறைந்துள்ளது. டெல்லியில் மட்டும் அதிக பட்சமாக குவிண்டாலுக்கு ரூ.340 விலை குறைந்துள்ளது.

மற்ற மாநிலங்களிலும் விலை குறைந்துள்ள நிலையில் ஒடிசாவில் மட்டும் குவிண்டாலுக்கு ரூ.20 விலை உயர்ந்துள்ளது. கடந்த 2-ந் தேதி நடந்த ஏலத்தில் 1.05 லட்சம் டன் குவிண்டாலுக்கு ரூ. 2,217.35 ஆகவும், கடந்த 9-ந் தேதி நடந்த ஏலத்தில் 1.08 லட்சம் டன் கோதுமை குவிண்டாலுக்கு ரூ.2,254.71 ஆகவும் விற்பனையான நிலையில் கடந்த 16-ந் தேதி 1.52 லட்சம் டன் கோதுமை குவிண்டாலுக்கு ரூ.2,155.96-க்கு விற்பனையாகி உள்ளது.

எதிர்பார்ப்பு

தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் ஏலங்களிலும் கோதுமை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவே எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே மத்திய அரசு எடுத்த நடவடிக்கை ஓரளவு பலன் தந்துள்ளது. அதேநேரத்தில் இந்திய உணவு கழகம் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கும் தேவைப்படும் அளவுக்கு கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியமாகும். அதன் மூலமாகவே கோதுமை விலை குறைவதற்கும் பொது வினியோகத்திட்டத்தில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story