தேவதானப்பட்டி அருகே ஆட்ேடாவில் சென்றபோதுகத்தி முனையில் விவசாயியிடம்6 பவுன் நகை பறிப்பு:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


தேவதானப்பட்டி அருகே ஆட்ேடாவில் சென்றபோதுகத்தி முனையில் விவசாயியிடம்6 பவுன் நகை பறிப்பு:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 July 2023 6:45 PM GMT (Updated: 25 July 2023 6:46 PM GMT)

தேவதானப்பட்டி அருகே ஆட்டோவில் சென்றபோது கத்தி முனையில் விவசாயியிடம் இருந்து 6 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

தேனி

ஆட்டோவில் பயணம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 55). விவசாயி. இவரது மகள் கார்த்திகா திருமணமாகி தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் வசித்து வருகிறார். கார்த்திகாவுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சண்முகம் தனது பேத்திக்காக 6 பவுன் தங்க நகைகள் வாங்கினார். பின்னர் அவர் அந்த நகையை எடுத்து கொண்டு நேற்று தேவதானப்பட்டிற்கு புறப்பட்டார்.

இதற்காக கொடைக்கானலில் இருந்து காட்ரோட்டுக்கு வந்தார். இதையடுத்து அவர் காட்ரோட்டில் இருந்து தேவதானப்பட்டிக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். ஆனால் வெகுநேரமாகியும் பஸ் வரவில்லை. அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்ேடாவை மறித்து அவர் அதில் ஏறினார். ஆட்டோவில் ஏற்கனவே 2 பேர் அமர்ந்து இருந்தனர்.

கத்தி முனையில் நகை பறிப்பு

பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் புல்லக்காப்பட்டி அருகே ஆட்டோ சென்றது. அப்போது ஆட்டோவில் இருந்த 2 பேர் சண்முகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். பதற்றம் அடைந்த அவர் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது சட்டைப்பையில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.500-யை பறித்தனர்.

சிறிது தூரம் சென்றதுடன் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் 2 பேரும் சண்முகத்தை கீழே இறக்கி விட்டு ஆட்டோவில் தப்பி சென்றனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்திடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கனை வலைவீசி தேடி வருகின்றனர். ஆட்டோவில் சென்றபோது கத்தியை காட்டி மிரட்டி விவசாயியிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story