நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படுவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு


நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படுவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு
x

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படுவது எப்போது? என பயணிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகரின் இதயப்பகுதியான சந்திப்பு பகுதியில் ரெயில் நிலையமும், பஸ் நிலையமும் அருகருகே அமைந்துள்ளது. இதனால் இப்பகுதி 24 மணி நேரமும் பயணிகள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இருக்கும். ஆனால் சந்திப்பு பஸ்நிலையத்தை இடித்து விட்டு புதுப்பிக்கும் பணி தொடங்கி, அதுவும் கிடப்பில் போடப்பட்டதால் தற்போது பஸ்கள் ஓடாமல் வெறிச்சோடி கிடக்கிறது.

'ஸ்மார்ட் சிட்டி'

நெல்லை மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டது. இதில் நெல்லை சந்திப்பு பஸ்நிலைய கட்டுமான பணிக்கு ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த பஸ் நிலைய பணி மட்டும் இன்னும் முழுமையாக நிறைவடையாமல் அரைகுறையாக நிற்கிறது. இதனால் 5 ஆண்டுகளாக இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2018-ம் ஆண்டு பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

பல்வேறு சிக்கல்கள்

இந்த பஸ் நிலைய கட்டுமான பணி பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. அங்கு அள்ளப்பட்ட மண், கனிமவள மண் என்று கூறப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் கட்டுமான பணி பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு பகுதியில் மட்டுமே பணி முடிக்கப்பட்டது. பூமிக்கு அடியில் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு வசதியாக ஒரு தளம், பஸ்கள் நின்று செல்ல தரைத்தளம், அதற்கு மேல் கடைகள் செயல்படுவதற்கு 3 தளங்கள் என 5 தளங்களுடன், ஒரு பகுதியில் கட்டுமானம் முடிவடைந்தது. மீதி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்போது உள்ள நிலையிலாவது பஸ் நிலையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தினர். அதன்பிறகு கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பஸ் நிலையத்தை திறக்க சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கையில் இறங்கினர்.

அனுமதி

இந்த பஸ் நிலையத்தை திறக்கும் வகையில், மின்சார வசதி, தளம் அமைக்கும் பணி ஆகியவை நடந்து வருகிறது. இதற்கிடையே, பஸ் நிலைய கட்டுமானம் தொடர்பாகவும் பிரச்சினை எழுந்ததால், அதற்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பஸ் நிலையத்துக்கு புதிய வடிவமைப்பு தயார் செய்து உள்ளனர். அதனை சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் கோரி உள்ளனர். ஓரிரு நாட்களில் அந்த அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது. மேலும் பஸ் நிலையத்தின் முகப்பு பகுதியை அழகுப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

எது எப்படியோ, பஸ் நிலையத்தை விரைவில் திறந்து பயன்பாட்டுக்கு ெகாண்டுவர வேண்டும் என்பதே பயணிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

கோடை விடுமுறைக்குள்...

நெல்லையை சேர்ந்த ராஜேஷ்:-

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, ரெயில் மூலம் வெளியூர்களில் இருந்து வருபவர்கள், சந்திப்பு ரெயில் நிலையத்தில் இறங்கி அரவிந்த் கண் மருத்துவமனை பஸ் நிறுத்தம் வரை மூட்டை முடிச்சுகளை சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதேபோல் வெளியூர் செல்வதற்கு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளும் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர்.

தற்போது பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற உள்ளது. எனவே இந்த கோடை விடுமுறை காலத்துக்குள் சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும். அவ்வாறு செய்தால் வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகள் சந்திப்பு பஸ் நிலையத்தை பயன்படுத்தி பஸ்களில் எளிதாக பள்ளிகளுக்கு சென்று வருவதற்கு வசதியாக இருக்கும். மேலும் பயணிகளும் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு சென்றுவர முடியும்.

வியாபாரிகள் பாதிப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ்:-

சந்திப்பு பஸ் நிலையம் மூடப்பட்டு கிடப்பதால் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக வியாபாரிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பஸ் நிலையத்தை அதிகாரிகள் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் நிலையத்தை முழுமையாக கட்டி திறக்க முடியாவிட்டாலும், தற்போது உள்ள நிலையில் பஸ்களை மட்டுமாவது அங்கிருந்து இயக்க வேண்டும்.

நெல்லை த.மு. ரோட்டில் காலணி கடை நடத்தி வரும் சிவா:-

சந்திப்பு பஸ் நிலையத்தை மூடி 5 ஆண்டுகள் ஆகிறது. இதனால் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் ஏழை, நடுத்தர மக்கள், முதியோர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள். சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு மட்டும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இது முழுவதும் கட்டண வகையில் இயக்கப்படுகிறது. பஸ் நிலையம் செயல்படாததால் சந்திப்பு பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே, பஸ் நிலையத்தை தற்போது உள்ள நிலையில் உடனடியாக திறந்து பஸ்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story