பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது? அமைச்சர் சக்கரபாணி பேட்டி
பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் அர.சக்கரபாணி பதில் அளித்தார்.
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது வினியோக திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் வே.ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் டாக்டர் சு.பிரபாகர், இணை நிர்வாக இயக்குனர் க.கற்பகம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
செறிவூட்டப்பட்ட அரிசி
பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
இரும்பு சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 மூன்றும் அந்த அரிசியில் கலந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. உதாரணமாக 100 கிலோ அரிசியில், ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்க இருக்கிறோம். இதன் காரணமாக பொதுமக்களுக்கு, பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் வகையிலான ஆற்றல் கிடைக்கும். இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்துதான் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்படும்.
கடத்தலை தடுக்க
குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையில் ஏற்கனவே சென்னையிலும், மதுரையிலும் என 2 சூப்பிரண்டுகள்தான் இருந்தார்கள். இப்போது கூடுதலாக திருச்சி, கோவையில் 2 சூப்பிரண்டுகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 3 இடங்களில் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ரோந்து வாகனங்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக வாகனம் செல்ல முடியாத 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அண்டை மாநிலத்துக்கு நடந்து செல்பவர்களையும் கண்காணித்து வருகிறோம்.
கடந்த ஆண்டுகளை விடவும் 3, 4 மடங்கு அரிசி கடத்தலை தடுத்திருக்கிறோம். 132 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 7-5-2021 முதல் 27-11-2022 வரை 13 ஆயிரத்து 628 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரூ.13 கோடியே 7 லட்சத்து 34 ஆயிரத்து 991 பொருட்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது?
இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, தலைமைச்செயலகத்தில் நடந்த கூட்டத்தில் பொங்கலுக்கு என்ன பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டன? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து விரைவில் முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று அர.சக்கரபாணி பதில் அளித்தார்.
முதல்-அமைச்சர் ஆலோசனை
முன்னதாக, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் வழங்கலாம்? ரொக்க பணம் வழங்குவது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்குவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.