லாரியில் ஏற்றி வந்த போது மின்கம்பியில் உரசியதால் பஞ்சு மூட்டைகள் தீப்பிடித்து எரிந்து நாசம்
சித்தோடு அருகே மின் கம்பியில் உரசியதால் லாரியில் ஏற்றி வரப்பட்ட பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.
பவானி
சித்தோடு அருகே மின் கம்பியில் உரசியதால் லாரியில் ஏற்றி வரப்பட்ட பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.
பஞ்சு மூட்டைகள்
ேசலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). இவர் தனக்கு சொந்தமான லாரியில் பஞ்சு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வந்து கொண்டு இருந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் லாரி சித்தோடு அருகே வந்தது. அப்போது லாரியில் ஏற்றப்பட்டு இருந்த பஞ்சு மூட்டைகள் ரோட்டின் குறுக்கே சென்ற மின்கம்பியில் உரசியது. இதனால் பஞ்சுமூட்டை தீப்பற்றி எரிந்தது. ஆனால் தீப்பற்றியது தெரியாமல் வெங்கடேஷ் லாரியை ஓட்டிக்கொண்டு இருந்தார்.
எரிந்து நாசம்
இந்தநிலையில் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் லாரியில் தீப்பிடித்து எரிகிறது என்று சொன்னதும் பதறிப்போய் சித்தோடு சமத்துவபுரம் அருகே லாரியை ஓரமாக அவர் நிறுத்தினார். அதற்குள் லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே அவர் கீழே குதித்து உயிர் தப்பினார்.
இதுகுறித்து உடனே பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் அனைத்து பஞ்சு மூட்டைகளும் எரிந்து நாசமானது. அது பல லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.