சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு


சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு
x

நெல்லை ஈரடுக்கு மேம்பால பக்கவாட்டு சுவர் சிமெண்டு பூச்சு பெயர்ந்து தலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை ஈரடுக்கு மேம்பால பக்கவாட்டு சுவர் சிமெண்டு பூச்சு பெயர்ந்து தலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரிசி கடை தொழிலாளி

நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 56). இவர் பாளையங்கோட்டையில் உள்ள அரிசி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 3-ந்தேதி பால் வாங்குவதற்காக மொபட்டில் நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்து...

இதற்கிடையே, ஈரடுக்கு மேம்பாலத்தை சுமார் ரூ.1½ கோடியில் சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வழியாக வேல்முருகன் மொபட்டில் சென்றபோது, ஈரடுக்கு மேம்பால பக்கவாட்டு சுவரின் சிமெண்டு பூச்சு திடீரென்று பெயர்ந்து அவர் மீது விழுந்தது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த வேல்முருகனை உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

பரிதாப சாவு

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை சந்திப்பு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் வேல்முருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார், வேல்முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே, ஈரடுக்கு மேம்பால கட்டுமான பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்டதால்தான் பக்கவாட்டு சுவர் சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து வேல்முருகன் இறந்தார் என்று கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாலையில் அவர்கள், நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களிடம், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வேல்முருகனின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு செலவான தொகையையும் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story