கருக்கலைப்பு மருந்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த விவகாரம்: அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கருக்கலைப்பு மருந்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த விவகாரம்:  அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

கள்ளக்குறிச்சியில் கருக்கலைப்பு மருந்து சாப்பிட்ட பெண் உயிரிழந்த வழக்கில் விசாரணை தொடர்பாக அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் பொது சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொசு வலை மற்றும் போர்வைகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் நீர்நிலைகளின் ஓரங்களில் வசிப்பவர்களுக்கு 3 லட்சம் கொசுவலைகள் வழங்கப்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற்றுக் கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி பெண் கருகலைப்புக்கான மருந்தினை உட்கொண்டதால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

மருத்துவ கவுன்சிலில் வாக்களிப்பு முறைப்படி பதிவாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். 1.5 லட்சம் மருத்துவர்கள் வாக்களிக்க தகுதியான மருத்துவர்களாக உள்ளனர். மாவட்ட கவுன்சிலில் 10 பேர் உறுப்பினர்கள், அதில் 3 பேர் அரசு தேர்ந்தெடுக்கும், 7 பேரை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்பின் தலைவர், துணை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும். மருத்துவ கவுன்சிலுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பட உள்ளது.

அதில் பதிவாளர் பதவி குறித்து விளக்கம் கேட்கப்பட உள்ளது. நீதிமன்றத்திலும் மருத்துவ சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விதிமுறைகளின் படி மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை. புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு 6 மருத்துவ கல்லூரி மற்றும் 1 தமிழ் வழி மருத்துவ கல்லூரி என 7 மருத்துவ கல்லூரி வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து புதிய மருத்துவ கல்லூரி குறித்து நேரில் சென்று கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story